ஈரோடு அருகே அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 5 மாதங்களாக எடுக்கப்படாமல் இருந்த பேருந்தை முறையாக பராமரிக்காததால் இது போன்று விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஈரோடு மாவட்டம், சிவகிரி அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி 42 எண் கொண்ட அரசுப் பேருந்து வந்துக் கொண்டு இருந்தது. அப்போது லக்காபுரம் அருகே பேருந்து வந்துக் கொண்டு இருந்தபோது பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்தது.

இதனிடையே எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி காவல்துறையினர் பேருந்தை அப்புறப்படுத்தியபோது பேருந்தின் அடிப்பகுதியில் இரண்டு இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் அதில் பயணித்த நான்கு பேரும் உடல் நசுங்கி இறந்து கிடந்தனர்.

பேருந்தில் பயணித்த பயணிகள் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனிடையே ஆம்புலன்ஸ் மூலம் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் முதலுதவி சிகிச்சைக்காக காயமடைந்த பயணிகளையும் அனுப்பி வைத்தனர். பேருந்து இயங்கத் தொடங்கிய 3ஆவது நாளே இத்தகைய விபத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே காவல்துறை விசாரணை செய்ததில் இவர்கள் மொடக்குறிச்சி குளூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, மரகதம், பாவையம்மாள், மோகனாபுரி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஒரு திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் இந்த பேருந்து விபத்து என்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேருந்து விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks