truetamilnews.com

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்த நாள் நிகழ்ச்சி மற்றும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆகியவற்றுக்காக பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கோவை வந்திருந்தார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன்

இதையடுத்து, சித்தாப்புதூரில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் வைத்து முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பிரணாப் முகர்ஜியின் அரசியல் அனுபவம், பொருளாதார சிந்தனைகள் இந்த நாட்டுக்கு சிறப்பாக இருந்தது. அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அனுமதியளித்தார். அவரது மரணம் வேதனைக்குரியது. பா.ஜ.க-வின் சக்தி கேந்திரப் பொறுப்பாளர்கள் மூலமாக பூத் கமிட்டிகளைப் பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. பா.ஜ.க-வை நோக்கி பலதரப்பட்ட மக்கள், தி.மு.க சீனியர் நிர்வாகிகள் வர ஆரம்பித்துள்ளனர். பிரதமர் மோடி ஏற்படுத்திய உத்வேகம் அதற்கு முக்கிய காரணம்.


மத்திய அரசின் திட்டங்களில், நாட்டிலேயே அதிகம் பலனடைந்த மாநிலம் தமிழகம்தான். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், வெற்றிபெற்று எங்களது கணிசமான உறுப்பினர்களை சட்டசபைக்குள் உட்கார வைக்க வேண்டுமென்பதுதான் எங்கள் பிரதான திட்டம். எங்களது முழு கவனமும் தேர்தலை நோக்கிதான் உள்ளது. அதேநேரத்தில், தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஏற்கெனவே உள்ள கூட்டணி தொடர்கிறது. அது பலமாகத்தான் உள்ளது.
முக்கியமாக, அதில் எங்களது கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாங்கள் சர்வே நடத்தினோம். அதன்படி, 60 தொகுதிகளில் தனித்து நின்றால் கூட நாங்கள் வெற்றி பெறுவோம் என ரிசல்ட் வந்துள்ளது. நாங்கள் அதிக வலுவாக இருக்கும் பகுதியாகக் கருதுவது கொங்கு மண்டலம்தான்.

அமைச்சர்களின் பேச்சு கூட்டணியை முறிக்கும் வகையில் இருக்கக் கூடாது. சகோதரர் ரஜினி ஒரு தேசியவாதி, ஆன்மிகவாதி. அவர் அரசியல் கட்சி தொடங்கினால் அதை நாங்கள் வரவேற்போம். மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் எங்களுடன் பேசி வருகின்றனர். இன்னும் நிறைய முக்கிய நிர்வாகிகள் எங்கள் கட்சியில் சேர வாய்ப்புள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும்” என்றார். அப்போது, பா.ஜ.க மூத்தத் தலைவர் வானதி சீனிவாசன், துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.
ஏற்கெனவே, கடந்த வாரம், அண்ணாமலை கோவை வந்திருந்போது, ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்காமல் பா.ஜ.க-வினர் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். இதுதொடர்பாக, அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க-வினர் மீது காட்டூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இன்றை நிகழ்ச்சியிலும் பா.ஜ.க-வினர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks