ஜானகிபுரம் அடுத்த சீயாளங்கொல்லை கிராமத்தில் ஏரி நீர்வெளியேறும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாசன வசதிக்கான நீரை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருக்கழுக்குன்றம் ஒன்றியம், மோசிவாக்கம் ஊராட்சி சீயாளங்கொல்லை கிராமத்தில் சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் அந்த ஏரியில் இருந்து விவசாயத்துக்கு நீர் வெளியேறும் மதகுகளின் அருகே உள்ள ஏரிப்பகுதி நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பாசனத்துக்கு போதுமான நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

சீயாளங்கொல்லை ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2005 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் ஆட்சியரிடம் விவசாயிகள் அளித்த மனுவைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு வட்டாட்சியர் மூலம்திருக்கழுக்குன்றம் வருவாய்த்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், ஆண்டுகள் பலகடந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவே இல்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் கூறியதாவது: ஆக்கிரமிப்பு காரணமாக சீயாளங்கொல்லை ஏரிநீரை பாசனத்துக்கு பயன்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால், ஆக்கிரமிப்பை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால், ஏரியில் நீர் நிரம்பியிருக்கும்போது ஆக்கிரமிப்புகளை அகற்றவரும் அதிகாரிகள், பாசனத்துக்கு நீர் இருப்பதாகக் கூறி திரும்பிச் சென்றுவிடுகின்றனர். தற்போது ஏரி நீரின்றி வறண்டுள்ளதால் விவசாயிகளின் நலன் கருதி இப்போதாவது ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, ”சீயாளங்கொல்லை ஏரியை நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறும் நடவடிக்கைஎடுக்கப்படும்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks