சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அரசுப் பள்ளியை பாதுகாக்க ஊராட்சித் தலைவர் தனது 2 குழந்தைகளையும் அங்கு சேர்த்தார்.

ஆங்கிலவழி கல்வி மோகத்தால் பெற்றோர் தனியார் பள்ளியை நாடி வருகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதைத் தடுக்க முடியாமல் அரசுப் பள்ளி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.இதனால் பல அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் 10-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை வேறு பள்ளிகளுடன் இணைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் காளையார்கோவில் அருகே மாரந்தை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 6 மாணவர்களே இருந்தனர்.

இதையடுத்து அப்பள்ளியைப் பாதுகாக்க மாரந்தை ஊராட்சித் தலைவர் திருவாசகம் தனது இரண்டு குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்த்தார்.அவரது மகள் ரூபினி (9), மகன் கோகுலஹரிபாலா (6) ஆகிய இருவரும் சூராணத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்ததை அடுத்து மற்றவர்களும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தனர்.இதனால் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஊராட்சித் தலைவர் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவர் திருவாசகம் கூறுகையில், ” எங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருந்ததால், மூடும்நிலைக்கு தள்ளப்பட்டது.இதனால் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதற்காக எனது குழந்தைகளை முதலில் சேர்த்தேன். தற்போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks