சென்னை : 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையில் பயிற்சி முகாமில் பங்கேற்க வந்து சேர்ந்தனர். தோனி, சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர் உள்ளிட்டோர் ஒரே தனி விமானத்தில் சென்னை வந்தனர். சிஎஸ்கே அணி மீண்டும் ஒன்று கூடி உள்ளதை அடுத்து அந்த அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில், ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்ட பிசிசிஐ ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் தொடரை நடத்த உள்ளது. அனைத்து ஐபிஎல் அணிகளும் அதற்கு தயார் ஆகி வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 15 முதல் ஆறு நாட்களுக்கு சென்னையில் பயிற்சி முகாம் நடத்த உள்ளது. அதன் முடிவில் ஆகஸ்ட் 22 அன்று ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பிச் செல்ல உள்ளது. இதன் இடையே அனைத்து வீரர்களுக்கும் மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாமுக்கு சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் தனி விமானத்தில் கிளம்பி வந்தனர். அதற்கு முன்னதாக அனைவரும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டனர். தோனி உட்பட யாருக்கும் பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்த பின் அனைவரும் சென்னை வரத் தயாரானார்கள்.

புகைப்படம்

சுரேஷ் ரெய்னா, தோனி, தீபக் சாஹர், பியுஷ் சாவ்லா, கரன் சர்மா உள்ளிட்டோர் ஒரே விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் விமானத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதை பகிர்ந்து வருகிறார்கள்.

ஆறு நாட்கள் சென்னையில் பயிற்சி செய்ய உள்ள சிஎஸ்கே வீரர்கள் கடும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க உள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி செய்ய உள்ளனர். இந்த முறை ரசிகர்களுக்கு மைதானத்திற்கு உள்ளே அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தனிமை

ஆகஸ்ட் 22 அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் சிஎஸ்கே வீரர்கள் அங்கே ஆறு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அப்போது எடுக்கப்படும் கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாதிப்பு இல்லை என தெரிந்த உடன் பயிற்சி துவங்கும்.

சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான இந்திய வீரர்கள் மட்டுமே சென்னை பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளனர். ஹர்பஜன் சிங், ஷர்துல் தாக்குர், ஜடேஜா ஆகியோர் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டு வீரர்கள்

பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாத வீரர்கள் ஆகஸ்ட் 22 அன்று சிஎஸ்கே அணியுடன் பயணம் செய்ய உள்ளனர். மற்ற வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் பிற உதவி பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகம் வர உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks