truetamilnews.com

ஒரு படத்தைப் பார்க்க ரூ.199 கட்டணம் வசூலிப்பது மிக அதிகமானது என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார்.

விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்ற நிலையில் ஜீ ப்ளக்ஸ் (zee plex) என்ற ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

திரையரங்குகளைப் போலவே காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக க/பெ.ரணசிங்கம் அமைந்துள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தை ஒருமுறை பார்க்க ரூ.199 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் ஜீ ப்ளக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் இத்திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் ஒரு படத்தைப் பார்க்க ரூ.199 கட்டணம் வசூலிப்பது மிக அதிகமானது என்று கூறி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன். அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “ஓடிடி தளத்தில் எந்த ஒரு படத்தையும் நேரடியாகப் பார்க்க ரூ.199 கட்டணம் வசூலிப்பது மிக அதிகமானது. மாதம் சந்தா தொகை கட்டியதன் மூலம் இலவசமாக படம் பார்க்கவே நமது பார்வையாளர்கள் தயாராகியுள்ளனர்.

கட்டணம் நிர்ணயித்தால் தவிர்க்கமுடியாத சுவாரஸ்யமான படத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்துவார்கள். இந்த புதிய கட்டண முறை எப்படி வரவேற்பைப் பெறப்போகிறது என்று பார்க்கலாம்” இவ்வாறு தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

தியேட்டரில் 4 பேர் சென்று படம் பார்க்க டிக்கெட் விலை, பார்க்கிங், கட்டணம், தின்பண்டம் என அனைத்துக்கும் சேர்த்து ரூ.2000 செலவாவதை விட ரூ.199 கட்டணம் செலுத்துவது சரிதான் என்று தனஞ்ஜெயன் பதிவுக்கு ஒரு பதில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதில் கூறிய தனஞ்ஜெயன், “புதிய திரைப்படங்களை இலவசமாக பார்த்து பழகிய மக்கள் இந்த முறையில் பார்க்க மாட்டார்கள். அக்டோபரில் இதன் முடிவு தெரியும்” என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks