truetamilnews.com

ஒழுக்கமற்ற மனைவிக்கு கணவரின் ஓய்வூதியம் வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சேவியருக்கும் ஸ்டெல்லாவுக்கும் திருமணமாகி இருந்தது. மனைவியிடமிருந்து பிரிந்து வாழ சட்டப்படி நீதிமன்றத்தில் 1988ம் ஆண்டு உத்தரவு பெற்றார். அதன் பிறகு 1989ம் ஆண்டு, அதாவது விவாகரத்து பெறாமலேயே, மேரி என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார். 2வது திருமணத்தில் சேவியருக்கு 2 மகள்கள் உள்ளார்கள். ( மூன்று பேரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது.

அரசு ஊழியராக பணியாற்றிய சேவியர் 2011-ம் ஆண்டு இறந்தார். அவருடைய ஓய்வூதிய பண பலன்கள், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை கேட்டு 2 வது மனைவி மேரி விண்ணப்பம் செய்தார்.

இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த முதன்மை கணக்காளர் ஜெனரல், 2-வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என்று மறுத்து விட்டார். ஆனால், 2-வது மனைவியின் மூலம் பிறந்த 2 மகள்களும் ஓய்வூதிய பலன்களை பெற தகுதியானவர்கள் என்றும் ஓய்வூதிய தொகையை மூன்றாக பிரித்து, முதல் மனைவி ஸ்டெல்லாவுக்கு ஒரு பங்கும், 2-வது மனைவி ராணியின் 2 மகள்களுக்கு தலா ஒரு பங்கும் வழங்க உத்தரவிட்டார்.


இதை எதிர்த்து 2வது மனைவி மேரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-


நீதிமன்றம் மூலம் கணவன்-மனைவி சட்டப்படி பிரிந்து வாழ அனுமதி பெறுவது என்பது வேறு, விவாகரத்து பெறுவது என்பது வேறு. இந்த வழக்கில் சேவியர் சட்டப்படி பிரிந்து வாழத்தான் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளார். இதை விவாகரத்தாக கருதமுடியாது. அதனால், மனுதாரர் மேரிக்கும், மறைந்த அரசு ஊழியர் சேவியருக்கும் நடந்த திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை. இதனால், மனைவி என்ற அந்தஸ்தை மனுதாரர் பெறமுடியாது. இந்த அடிப்படையில், 2-வது மனைவியான மனுதாரருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என்று முதன்மை கணக்காளர் ஜெனரல் உத்தரவிட்டது சரிதான்.


அதேநேரம், நீதிமன்றம் மூலம் சட்டப்படி பிரிந்து வாழ உத்தரவு பெற்ற மனைவி கணவரின் ஓய்வூதியம் பெற தகுதியானவர்தான். ஆனால், ஒழுக்கமற்ற நடத்தையின் காரணத்துக்காக பிரிந்து வாழும் உத்தரவை பெற்றிருக்கக்கூடாது.


தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்படி, ஒழுக்கமின்மை காரணமாக பிரிந்த மனைவி, கணவரின் ஓய்வூதியத்தை பெற தகுதியானவர் இல்லை. இந்த வழக்கில் முதல் மனைவி ஒழுக்கமற்ற நடத்தையின் காரணத்தினால், அவரிடம் இருந்து சட்டப்படி பிரிந்து வாழ நீதிமன்றத்தில் சேவியர் உத்தரவு பெற்றுள்ளார். எனவே, ஒழுக்கமற்ற மனைவி, ஓய்வூதியம் பெற தகுதியானவர் இல்லை. அதனால், ஓய்வூதியத்தை 3 பங்காக பிரித்து வழங்கும் உத்தரவை ரத்து செய்கிறேன்.


இந்த வழக்கில் ஒழுக்கமற்ற முதல் மனைவியும், சட்டப்படி விவாகரத்து பெறாதவரை திருமணம் செய்ததால் 2-வது மனைவியும், அதாவது இருவருமே குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியானவர் இல்லை என்று முடிவு செய்கிறேன். அதேநேரம், மறைந்த அரசு ஊழியரின் ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும், 2-வது மனைவியின் மூலம் பிறந்த 2 மகள்களுக்கு சரிசமமாக பிரித்து வழங்க உத்தரவிடுகிறேன்,” என்று நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks