truetamilnews.com

சென்னை: எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பு உள்ளது, இந்தியாவில் மக்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை காக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறைதான், என்று நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா இரண்டு நாட்களுக்கு முன் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து தமிழகம் முழுக்க பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அவர் தனது அறிக்கையில், ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. இது போன்ற அவலம் எதுவும் இல்லை. ஒரு தேர்வெழுதப் செல்ல மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் நிலைக்கு நாம் சென்று இருக்கிறோம்.

தேர்வு பயம்

தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. அதன்பின் இதை கடந்து விடுகிறோம் .இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிப்பார்கள்.

நீதிமன்றம்

உயிருக்குப் பயந்து காணொளியில் வழக்குகளை நடத்தும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய்த் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டும் காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள், என்று சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

என்ன சிக்கல்

நீதிமன்றங்களுக்கு எதிராக சூர்யா இப்படி பேசியது பெரிய சர்ச்சையானது. இதனால் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹுக்கு கடிதம் எழுதி இருந்தார்.ஆனால் இன்னொரு பக்கம் முன்னாள் நீதிபதிகளான அரிபரந்தாமன், அக்பர் அலி, கண்ணன், சந்துரு, பாட்ஷா, சுதந்திரம் ஆகியோர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று கூறினார்கள்.

என்ன உத்தரவு

இந்த வழக்கில் இன்று சென்னை ஹைகோர்ட் தனது முடிவை அறிவித்தது. அதில் சூர்யாவிற்கு எதிராக அவமதிப்பு வழக்கு விசாரணை நடத்தப்படாது என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. அதில், சூர்யாவின் இது போன்ற விமர்சனம் தேவையற்றது. பொது விவகாரங்கள் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போது கவனமாக பேச வேண்டும்.கொரோனா பாதிப்பிற்கு இடையே நீதிமன்றங்கள் எப்படிச் செயல்பட்டுள்ளன என்று அறிந்து பேச வேண்டும். கொரோனாவிற்கு இடையிலும் 42 ஆயிரத்து 233 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

இனி மேல் எப்படி

இனிமேல் நீதிபதிகளையோ, நீதிமன்றத்தையோ அவமானப்படுத்தும் வகையில் சூர்யா பேசக்கூடாது. குறிப்பாக நீதிமன்றங்கள், நீதிபதிகள் குறித்து விமர்சிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. அவரின் சமூக சேவைகளை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது என்று சென்னை ஹைகோர்ட் இன்று உத்தரவிட்டது.

சூர்யா வழக்கு

இந்த நிலையில் நடிகர் சூர்யா இது தொடர்பாக டிவிட் செய்துள்ளார். அதில், இந்திய நீதித்துறையின் பெருந்தன்மை எனக்கு நிறைவை தருகிறது. எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பு உள்ளது. இந்தியாவில் மக்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை காக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறைதான். சென்னை ஹைகோர்ட் கொடுத்த நியாயமான தீர்ப்பை தாழ்மையுடன், பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன், என்று நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks