truetamilnews.com

‘ஐ சப்போர்ட் சூர்யா’ – சமூக வலைதளங்களில் இன்றைய டிரெண்டிங் இதுதான்.

நேற்று முன்தினம், நீட் தேர்வு ஏற்படுத்திய மன அழுத்தம் காரணமாக 3 மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், நடிகர் சூர்யா வெளியிட்ட ஒரு அறிக்கை தமிழகத்தில் சூடான விவாதத்தை கிளப்பி உள்ளது.

நீட் தேர்வு ஆதரவு, நீட் தேர்வு எதிர்ப்பு என்று இரு விதமான வாதங்கள் வலுப் பெற்றுள்ள நிலையில், நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை இந்திய அளவிலும் விவாதிக்கப்படும் ஒன்றாக மீண்டும் உருவாகியுள்ளது.

சூர்யா அறிக்கை..

சூர்யாவின் அறிக்கையில், நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி, உயிர்களையும் பறிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல ஒரு அவலம் இல்லை என்றும், நவீன கால துரோணர்கள், ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வு எழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என கேட்கிறார்கள் என அரசியல் ரீதியான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

நமது பிள்ளைகளின் தகுதியையும், திறமையையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்கக் கூடாது என்றும், அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது எனவும் சூர்யா தனது அழுத்தமான வாதத்தை முன் வைத்துள்ளார்.

சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் என்றும் சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சூர்யாவின், இந்த ஆக்ரோஷமான அறிக்கைதான சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.

அறிக்கை சர்ச்சையானதா

அந்த அறிக்கையில், நீதிமன்றம் குறித்து சூர்யா தெரிவித்த ஒரு கருத்துக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹிக்கு, நீதிபதி சுப்பிரமணியம் எழுதிய ஒரு கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, முன்னாள் நீதிபதிகள் 6 பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதிகளான, சந்துரு, கே.எம். பாஷா, சுதந்திரம், ஹரிபரந்தாமன், கே.கண்ணன் மற்றும் அக்பர் அலி ஆகியோர் இந்த கடிதத்தை எழுதி உள்ளனர்.

சூர்யா தெரிவித்த கருத்துகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், சூர்யா தனது அறக்கட்டளை மூலம் ஏராளமான மாணவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார் என்றும் முன்னாள் நீதிபதிகள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் ஆதரவு

இந்த தகவல்கள் வெளியான நிலையில், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ‘தமிழ்நாடு ஸ்டாண்ட் வித் சூர்யா’ என்றும் ‘சூர்யா அகைன்ஸ்ட் நீட் ‘ என்ற ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது.

இந்த ஹேஸ்டேக்குகளில் கருத்தை பகிர்ந்துள்ள பலரும், அரசியல்வாதிகளே அமைதியாக இருக்கும்போது, சூர்யா தைரியமாக தனது கருத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று புகழ்ந்துள்ளனர்.

தமிழக மேப்பை வரைந்து, அதில் சூர்யாவின் படத்தை வைத்து, தமிழக ‘ஐகான்’ என சித்தரிக்கும் படங்கள் பகிரப்பட்டுள்ளன. ஆயுத எழுத்து, தானா சேர்ந்த கூட்டம், சூரரைப்போற்று படங்களில் உள்ள சூர்யா ஸ்டில்களையும் ரசிகர்கள் பகிந்து வருகின்றனர்.

அறச்சீற்றம் என கொண்டாடும் ரசிகர்கள்

“அறச்சீற்றம் என்பது அநியாயத்தைக் கண்டவுடன் வருவது, கட்சி ஆரம்பித்து, முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தேர்தல் சமயம் பார்த்து வருவதில்லை” என்றும் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.

“புரட்சி எழுந்தபின் தலைமை ஏற்கும் தலைவன் அல்ல, புரட்சியை ஏற்படுத்தும் அவனே தலைவன்” என்று திண்டுக்கல் மாநகர் சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளன. “எழுச்சி எழுந்தபின் தலைமை ஏற்கும் தலைவன் அல்ல, எழுச்சியை ஏற்படுத்துபவனே தலைவன்” என்றும் போஸ்டர் அடித்துள்ளனர்.

“இன்று மட்டும் மூன்று பேர், நாளை எத்தனை பேரோ,” “திரைப்பட வசனங்களுக்கு மட்டும் குரல் கொடுக்கும் திரை நாயகன் அல்ல, சமூக பிரச்சினைகளுக்கு முதல் குரல் கொடுக்கும் தலைவன்” என மதுரை மாநகர சூர்யா நற்பணி மன்றத்தினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

தல ரசிகர்களின் மீம்ஸ்

சூர்யாவின் கருத்துக்கு சூர்யா ரசிகர்கள் மட்டுமல்ல, அஜித், சிம்பு, சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

அஜித் ரசிகர்கள் வெளியிட்டுள்ள ஒரு மீம்ஸில், “தம்பி சூர்யா, நீட் வேண்டாம்னு நீங்க பேசுங்க, உங்க பின்னாடி நான் இருக்கேன்” என அஜித் கூறுவது போலவும், “நீங்க இருக்கும் போது எனக்கு என்ன பயம் தல.. கண்டிப்பா நான் பேசுவேன்” என சூர்யா பதில் சொல்வது கூறுவது போலவும் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சிலம்பரசன் ஃபேன்ஸ் கிளப் என்கிற டிவிட்டர் பதிவில், “சூர்யா எந்த தவறான கருத்தையும் பேசவில்லை” என்றும், “சிம்பு ரசிகர்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்” என்றும் கூறியுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ் கிளப் என்ற ட்விட்டர் பதிவில், “மாணவர்களுக்கு குரல் கொடுக்கும் சூர்யாவிற்கு நாங்கள் எப்போதும் பின்னால் நிற்போம்” என்றும், “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர் விக்ரம், நடிகர் கார்த்தி ரசிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை அளித்த இயக்குநர் பாரதிராஜா

இந்த நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாரதிராஜா , “சூர்யா என்ன பேசினாலும் சரியாகத்தான் பேசுவார்” என்று முழு நம்பிக்கை அளித்துள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவில், “சூர்யா வெளிப்படையாக பேசுவது பெருமை அளிக்கிறது” என்றும், “ஐ சப்போர்ட் சூர்யா” என்றும் கூறியுள்ளார்.

கல்விப் பணியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டுள்ளவர் நடிகர் சிவக்குமார். அவருக்கு பின்னர் அவரது மகன்கள் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் அகரம் அறக்கட்டளையை நிறுவி ஏழை கிராமப்புற பிள்ளைகளுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார். எனவே அவரது கோபம் நியாயமானது என்கின்றனர் பலரும். ஆனால் அவர்கள் சொல்லும் நியாயமான கருத்துகளை சிலர் சர்ச்சையாக்கி அரசியல் செய்வதால் சூர்யாவுக்கு ஆதரவு அளிப்பதாக நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர்.

நடிகர் சூர்யா முன்வைத்த கருத்து, தமிழக மாணவர்களின் நலன் சார்ந்தது மட்டுமல்ல, அது ஏழை மாணவர்கள் எல்லோருக்குமான குரல் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த செய்தியை நேற்றிலிருந்து ஆங்கில செய்தி ஊடகங்களும் தலைப்புச் செய்திகளாக விவாதித்து வருகின்றன. ஒரு திரை நாயகனின் கருத்து என்ன விளைவுகளை உருவாக்கும் என்பதை சமூகம் கவனித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks