truetamilnews.com

சென்னை: தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு ‘எஸ்இடிசி’ என்ற அரசு விரைவு பஸ்களின் சேவை, ரயில், மெட்ரோ ரயில் சேவை இன்று துவங்குகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இயல்புநிலை திரும்புவதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அரசு பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, பல்வேறு பிரிவுகளில் தளர்வு வழங்கப்பட்டது. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை கடந்த 1ம் தேதி முதல் தொடங்கியது.ஆனால் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது. எனவே மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகளையும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அரசு அறிவித்தது. இதன்படி இன்று முதல், எஸ்இடிசி பஸ்கள் இயங்க தொடங்குகிறது. 

முன்னதாக இப்பேருந்துகளுக்கான முன்பதிவு கடந்த 4ம் தேதி துவங்கியது. தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு நீண்ட தூர பேருந்துகள் இயக்கப்படுவதால் பலரும் முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை இம்மாதம் முழுவதும் பல்வேறு தேதிகளில் பயணம் மேற்கொள்வதற்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மாவட்டங்களுக்கு இடையே டிஎன்எஸ்டிசி பஸ்கள் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து இயக்கப்படும். மேலும் அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தினால் பேருந்துகளை இயக்கவில்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு உத்தரவுப்படி விரைவுப்பேருந்து சேவை துவங்குகிறது. தற்போது ஏ.சி பஸ் சேவை மட்டும் கிடையாது. ஒரு பஸ்சுக்கு, 26 பேர் மட்டுமே ஏற்றப்படுகின்றனர். இன்று இயக்கப்படும் பஸ்களில் பயணிப்பதற்காக 4,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். நாளை பயணம் செய்வதற்காக 2,000க்கும் மேற்பட்டோர், அதற்கு அடுத்தநாள் பயணம் செய்வதற்காக 1,000 பேர் என மொத்தம் இந்தமாதம் பல்வேறு தேதிகளில் பயணம் செய்வதற்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர்.

தினசரி 1,200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும். தற்போது பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இன்று 240 பஸ்கள் மட்டுமே இயக்குகிறோம். அடுத்தடுத்த நாட்களில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து பஸ்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும்.

பயணிகள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகள் இருந்தால் பஸ்சில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அறிகுறி இருப்பது தெரியவந்தால், பிற பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு வழியிலேயே இறக்கிவிடப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

ரயில் சேவை துவக்கம்:

கோவை, மயிலாடுதுறை, செங்கோட்டை, கன்னியாகுமரி, மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. பயணிகளின் டிக்கெட்டுகள் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி டிக்கெட் பரிசோதனை அமைப்பு மூலம் பரிசோதிக்கப்படும். அதன்பிறகு எழும்பூர் ரயில்நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ள 4 மற்றும் 5வது நடைமேடைக்கு செல்ல வேண்டும். அதைப்போன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 வது நடைமேடைகள் ரயில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பயணிகளும் பரிசோதனைக்கு பிறகே ரயிலுக்கு செல்ல வேண்டும். மேலும் ரயில் நிலையத்துக்கு 90 நிமிடங்களுக்கு முன்னரே பயணிகள் வந்துவிட வேண்டும். 

* பிற மாநில சேவை ‘கட்’

எஸ்இடிசி பஸ்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய இடங்களுக்கு செல்வது வழக்கம். தற்போது பிற மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் கோவை, திருநெல்வேலி வரையில் இயக்கப்படும். திருப்பதி செல்லும் பஸ்கள் வேலூர் வரையிலும், கர்நாடகா செல்லும் பஸ்கள் ஓசூர் வரையிலும் மட்டுமே செல்லும். மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படுவது குறித்து அந்தந்த மாநில அரசுகளுடன் சேர்ந்து தமிழக அரசு முடிவு செய்தபிறகு அறிவிக்கப்படும்.


* மெட்ரோ ரயில் 

truetamilnews.com

விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையில் மட்டுமே இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையில் ரயில்கள் இயக்கப்படும். மேலும், மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். 20 விநாடிகள் நின்று செல்லும் ரயில்கள் தற்போது 50 விநாடிகள் நின்று செல்லும். வரும் 9ம் தேதி பச்சை வழித்தடமான பரங்கிமலை முதல் சென்ட்ரல் இடையே சேவை தொடங்கப்பட உள்ளது.

* இரவில் கவனம் தேவை

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், அனைத்து கிளை மேலாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ‘கடந்த 5 மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால் இரவு நேரத்தில் பேருந்தை கவனமாக இயக்க வேண்டும். இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடத்துனர்கள் கண்டிப்பாக இருக்கையில் அமர்ந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பணிபுரிய வேண்டும். வழித்தடங்களில், இருசக்கர வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுவதாலும், அதிக சாலை தடுப்புகள் உள்ளதாலும், நகர எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதாலும் கவனமாக பணிபுரிய வேண்டும் என ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks