டெல்லி: தனியார் ரயில்களை இயக்கும் நிறுவனங்களே ரயிலின் நிறுத்தங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. அத்துடன், தனியார் ரயில்களுக்கான கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கு எந்தவொரு அமைப்பும் எதிர்காலத்தில் இருக்காது என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய அரசு பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, எதிர்காலத்தில் ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க உள்ளது. 2023ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. பாம்பார்டியர், ஆல்ஸ்டாம், சீமென்ஸ் உள்ளிட்ட 23 நிறுவனங்கள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன முதற்கட்டமாக 109 வழித்தடங்களில் 150 அதிநவீன ரயில்களை தனியார்களே இயக்கி கொள்வதற்கு அனுமதி வழங்க உள்ளது. தனியார் ரயில்களின் போக்குவரத்து விதிமுறைகள் தொடா்பான ஏலத்தில் பங்கேற்பவர்களுக்கான வரைவு அறிக்கை கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

தனியார் ரயில்கள் போட்டி

இந்த அறிக்கையில் முக்கியமான அம்சம் என்றால், எதிர்காலத்தில் தனியார் ரயில்களின் கட்டணத்தை நிர்ணயிக்க கட்டண ஒழுங்காற்று அமைப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் தனியார் ரயில் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரிக்கும் என்றும் இதனால் ரயில் கட்டணம் உயா்வது தடுக்கப்படும். இங்கு ஏகபோக சூழலில் இயங்க வாய்ப்பில்லை என்று ரயில்வே கூறுகிறது.

தனியார் ரயில்கள் நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ள ரயில்வே குறித்த நேரத்தில் ரயில்களை இயக்காவிட்டால், அதிக அபாரதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்துவதற்காக, தனியார் ரயில் நிறுவனம், ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ.512-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் ரயில்கள் தாமதமாக வந்தால், நேரம் தவறாமையின் விகிதம் குறையும். இவ்வாறு குறையும் ஒவ்வொரு சதவீதத்துக்கும் 200 கிலோ மீட்டா் தொலைவுக்கான கட்டணத்தை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் இதேபோல் தனியார் ரயில்கள் 10 நிமிடங்கள் முன்னதாகவே ஒரு ரயில் நிலையத்தை அடைந்தால், 10 கிலோமீட்டருக்கான கட்டணத்தை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளது.

ரயில்வே துறையின் காரணமாக, தனியார் ரயில் ரத்து செய்யப்பட்டால், அந்த துறை, தனியார் ரயில் நிறுவனத்துக்கு அபராதம் செலுத்த வேண்டும். அதேசமயம், தனியார் ரயில் நிறுவனம் ரயிலை ரத்து செய்தால், அந்நிறுவனம், ரயில்வே துறைக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மோசமான வானிலை, கால்நடைகள் குறுக்கே வந்து விபத்து, ஆள் மீது மோதி விபத்து, சட்டம்-ஒழுங்கு, பொதுமக்கள் போராட்டம், சட்ட விரோதிகளின் சதிச் செயல், பிற விபத்து, ஆளில்லா கடவுப்பாதையில் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் ரயில் தாமதமானால் அபராதம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் ரயில் நிறுவனங்கள் வருமானம் குறித்த தகவல்களைத் தவறாகத் தெரிவித்தாலும் அபராதம் செலுத்த வேண்டியது வரும் என்றும்வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய ரயில்வே கட்டணத்தில் தனியார் ரயில் நிறுவனங்களுக்க கட்டண விஷயத்தில் எந்த கட்டுப்பாடும் இருக்காது, இந்திய ரயில்வேயில் தற்போதுள்ள கட்டணங்களை குறைக்க அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. எந்தெந்த நிறுத்தங்களில் ரயில் நின்று செல்வது என்பதை நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். எனினும் அந்தத் தடத்தில் செல்லும் அதிவிரைவு ரயிலின் நிறுத்தங்களைவிட எண்ணிக்கை மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், தனியார் ரயில் ஆப்ரேட்டர்கள் ரயில்களின் பாதைகளில் இதுபோன்ற இடைநிலை நிறுத்த ரயில் நிலையங்களின் பட்டியலை ரயில்வேக்கு முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks