truetamilnews.com

பொள்ளாச்சி:மத்திய அரசின் கயிறு வாரியமும், தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கமும் இணைந்து, நவீன தொழில்நுட்பம் கொண்ட கயிறு திரிக்கும் இயந்திரத்தை நிறுவி, 20 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு ஏற்படுத்த பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு, ஒரு லட்சத்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அதில், 70 சதவீதம் பேர், வடமாநில தொழிலாளர்களாக உள்ளனர்.இந்நிலையில், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், கயிறு வாரியம் மற்றும் தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், இளைஞர்கள், இளம் பெண்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஏற்றுமதி அதிகம்

கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கவுதமன், செயலாளர் செல்வராஜ் கூறியதாவது:மத்திய அரசின் கயிறு வாரியத்தால், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தியை அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்கின்றன. அடுத்த ஒரு ஆண்டுக்குள், ஒரு லட்சம் புதிய வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கு, கயிறு வாரியம் பல பயிற்சிகள், புதிய பொருட்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில் சில கல்லுாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுகிறது.

பொள்ளாச்சியில், 1,400 கோடிக்கு மேல் தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள், 93 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு, 2,500 கோடிக்கு மேல் உள்நாட்டுக்கு தேவையான பொருட்கள் உற்பத்தி செய்து அனுப்பப்படுகிறது. அதில், பொள்ளாச்சியில் இருந்து ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தென்னை நார் உற்பத்தி செய்து, சீனாவுக்கு மூலப்பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சலுகைகள்

மத்திய கயிறு வாரியம் இதனை கருத்தில் கொண்டு, தென்னை நாரை கொண்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ், ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டப்டட் மேட், மரப்பலகை, கார்டன் ஆர்டிக்கல் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பினை தென்னை நார் உற்பத்தியாளர்களுக்கு செய்து தர பல சலுகைகள், பயிற்சிகளையும் வழங்குகிறது.அதில், தென்னை நாரை கொண்டு, ‘காயர் டூப்ளைஸ் ஸ்பின்னிங்’ எனப்படும் நவீன தொழில்நுட்பம் கொண்ட கயிறு திரிக்கும் இயந்திரத்தை, அடுத்த ஒரு ஆண்டுக்குள், 2,000 முதல், 3,000 வரை நிறுவ தென்னை நார் உற்பத்தியாளர்கள் உத்தேசித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு

இதன் மூலம், 20 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகும். இதற்காக, தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கம், கயிறு வாரியத்துடன் இணைந்து பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது.இன்று உலக நாடுகளில், பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மாற்றாக, நார் பொருட்களை பயன்படுத்த உலக நாடுகள் ஆலோசிக்கிறது. இதனால், 21 முதல் 35 வயது வரையுள்ள இளைஞர், இளம் பெண்கள் கயிறு திரிக்கும் பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம். பயிற்சி பெற விரும்புபவர்கள், கயிறு வாரியம் மற்றும் தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks