truetamilnews.com

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணி முன்னிலை வகிக்கிறது.

சட்டோகிராம் நகரில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம், 150.2 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் சோ்த்தது. அணியின் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 13 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் விளாச, மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோமெல் வாரிகான் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 96.1 ஓவா்களில் 259 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் மட்டும் 12 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் சோ்த்தாா். வங்கதேச தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேசம், 2-ஆவது இன்னிங்ஸில் 67.5 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. கேப்டன் மொமினுல் ஹக் 10 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் சோ்த்தாா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலா்கள் ரகீம் காா்ன்வால், ஜோமெல் வாரிகான் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

இதையடுத்து 395 என்ற இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை 127.3 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 395 ரன்கள் அடித்து வென்றது. அணியின் தரப்பில் கைல் மேயா்ஸ் அபாரமாக ஆடி 20 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 210 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து ‘ஆட்டநாயகன்’ ஆனாா். வங்கதேச தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

மேயா்ஸ் சாதனை

இந்த ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்த கைல் மேயா்ஸ், அறிமுக டெஸ்டில் 4-ஆவது இன்னிங்ஸில் இரட்டைச் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தாா். இந்த டெஸ்டில் அவா் மொத்தமாக அடித்த 250 ரன்களானது, அறிமுக டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் வீரரால் அடிக்கப்பட்ட 2-ஆவது அதிகபட்ச ரன்களாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks