truetamilnews.com

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் பாதுகாப்புப் படையினராலேயே தாக்குதல் அபாயம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என அமெரிக்க பாதுகாப்புப் படை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விழாவில் பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்படும் 25 ஆயிரம் தேசிய காவல் படையினரை சோதனைக்குள்படுத்த மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் வரும் 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர். தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. 

முன்னதாக, ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தின்போது, அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போதும் தாக்குதல் நடத்தப்படலாம் என எஃப்பிஐ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதிலும், பதவியேற்பு விழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள தேசிய காவல் படையினரில் சிலர் மூலமாகவே தாக்குதல் அபாயம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என எஃப்பிஐ கருதுகிறது. தேசிய காவல் படை என்பது அமெரிக்க ராணுவம் மற்றும் விமானப் படையின் ஓர் அங்கமாகும். முழுநேர அரசு ஊழியர்களான இவர்கள் பகுதி நேரமாக தேசிய காவல் படையில் பணிபுரிவார்கள்.

25 ஆயிரம் தேசிய காவல் படையினரையும் சோதனைக்குள்படுத்த எஃப்பிஐ திட்டமிட்டுள்ளது. தேசிய காவல் படையினர் மீதான பயங்கரவாத தொடர்பு குறித்து அவ்வப்போது ராணுவம் விசாரணையில் ஈடுபடுவது வழக்கம்தான் என்றாலும் தற்போது எஃப்பிஐ கூடுதலாக சோதனையில் ஈடுபடவுள்ளது.

இதுதொடர்பாக ராணுவ செயலர் ரையன் மெக்கார்த்தி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், தாக்குதலுக்கான சாத்தியக்கூறு குறித்து அறிந்துள்ளோம். கமாண்டர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள படையினர் மத்தியில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், இதுவரை அச்சுறுத்தல் தொடர்பாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks