truetamilnews.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மின் கம்பிகள் அறுந்து விழுந்தும், மின்கம்பங்களில் மின்சாரம் பாய்ந்தும் பலர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் எடப்பாடி அரசின் மின்சாரத்துறையில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு காரணமாக இத்தகைய மின் விபத்துகளில் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் வரகூர் அருகே தனியார் பேருந்து மீது உயர் அழுத்த மின்சாரக் கம்பி உரசியதால் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்துள்ள கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் மன்னார்குடி நோக்கி கணநாதன் என்ற தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது.

வரகூர் அருகே பேருந்து செல்லும்போது, முன்னால் சென்ற லாரியை முந்துவதற்காக பேருந்து ஓட்டுநர் வேகமாகச் சென்றுள்ளார். அப்போது சாலையோரம் மழைநீர் தேங்கியிருந்தால், லாரியை முந்தியபோது பேருந்து தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியுள்ளது.

அப்போது சாலையோரம் தாழ்வாகச் சென்ற உயர் அழுத்தக் மின்கம்பியில் பேருந்து உரசியுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தவர்கள் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நடுக்காவேரி போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பேருந்தில் பயணித்த ஒருவர் கூறுகையில், “பொங்கல் விழாவிற்காக மளிகை பொருட்கள் வாங்க இந்தப் பேருந்தில் பயனித்தேன். முறையான சாலை வசதி இல்லாததும் மற்றும் மின் கம்பங்கள் பராமரிப்பின்றி இருப்பதும், லாரியை முந்த முயன்றதுமே இந்த விபத்துக்கு காரணம்.

பேருந்தில் முன்பக்கம் இருந்த பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அலறல் சத்ததிற்குப் பிறகுதான் 5 பேர் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி உயிரிழந்தது தெரிந்தது.” எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்த தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மின்சார வாரிய உயரதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். பேருந்தில் மின்சாரம் தாக்கி ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks