truetamilnews.com

சென்னை:

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. ஊரடங்கில் இருந்து ஒவ்வொரு மாதமும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாத தளர்வுக்கு பின்னர் தியேட்டர்கள் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே இயங்கி வந்தன. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டதாலும், கொரோனா குறைந்து வருவதாலும் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென திரைத்துறையிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நடிகர் விஜய், நூறு சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தார். விஜய் நடிப்பில் மாஸ்டர், சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் ஆகியவை பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

ஆனாலும் ஜனவரி மாத தளர்வுகளில் 100 சதவிகித இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை. விஜய்யை தொடர்ந்து சிம்பு உள்ளிட்ட திரைத்துறையினரும் முதல்வருக்கு இதே கோரிக்கையை முன்வைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக அனைத்து வகையான திரையரங்குகளிலும் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

ஆனால், 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என உள்துறை செயலாளர் அஜய் பல்லா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு 5-ந்தேதியிட்ட சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், “திரையரங்குகள் 100 சதவிகித பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி அளித்து ஜனவரி 4-ந் தேதி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இது கடந்த டிசம்பர் 28-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்னும் உத்தரவை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் நீர்த்துப் போக செய்யக்கூடாது எனவும், அதனை பின்பற்ற வேண்டும் எனவும் விதி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும்.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப புதிய வழிகாட்டு அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்” எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் திரையரங்குகளை 100 சதவீத இருக்கைகளுடன் அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவை திரும்பப் பெறுவது குறித்து முதல்- அமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

இன்று ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் முதல்- அமைச்சர் நாளை சென்னை திரும்ப உள்ளார். எனவே நாளை இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks