truetamilnews.com

முக்கிய நிகழ்வுகள் :-

1884ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல் மறைந்தார்.

1936ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி கலாஷேத்திரா, சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.

நினைவு நாள் :-

லூயி பிரெயில்

இருளின் சிறையில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கொடுத்த லூயி பிரெயில் 1809ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார். இவருடைய பிறந்த தினமே சர்வதேச பிரெயில் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

லூயி மூன்று வயதில் தன்னுடைய தந்தையின் பட்டறையில் விளையாடி கொண்டியிருக்கும் போது ஊசி அவருடைய கண்ணில் பட்டு பார்வையை இழந்தார். அதன்பின் மற்றொரு கண்ணிலும் பரிவுக்கண் நோய் ஏற்பட்டு பார்வையை இழந்தார்.

இவருக்கு பார்வை திறன் இல்லாவிட்டாலும், புரிந்துகொள்ளும் சக்தி அதிகமாக இருந்தது. எனவே 1819ஆம் ஆண்டு விழி இழந்த இளைஞருக்கான நிறுவனத்தில் பிரெயில் சேர்க்கப்பட்டார்.

லூயி படிக்கும் நிறுவனத்திற்கு பிரான்ஸ் ராணுவத்தில் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற சார்லஸ் பார்பியா என்பவர் வருகை தந்து எந்த ஒளியையும் பயன்படுத்தாமல் தகவல்களை பரிமாற்றம் செய்யும் முறையை (நைட் ரைட்டிங்) விளக்கினார். இது விரல்களால் பேப்பரைத் தடவிப்பார்த்து எண்ணங்களை பரிமாற்றம் செய்யும் முறை.

பிரெயில், இந்தப் புதிய முறையைக் கற்றுக்கொண்டு, அதில் சில முன்னேற்றங்களையும் கொண்டு வந்தார். கடைசியாக புள்ளிகளை எண்ணி எண்ணி எழுத்துக்களை புரிந்துகொள்ளும் பிரெயில் முறையை உருவாக்கினார். பிரெயிலின் இந்த புதிய முறையை விளக்கும் முதல் புத்தகம் 1820ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான அங்கீகாரம் அப்போது கிடைக்கவில்லை.

1932ஆம் ஆண்டு கூடிய சர்வதேச மாநாட்டில் தான் பிரெயில் முறைக்கு அதிகாரபூர்வமான அங்கீகாரத்தை வழங்கியது. இவர் தனது 43வது வயதில் 1852ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி மறைந்தார்.

பிறந்த நாள் :-

ஏ.ஆர்.ரகுமான் 

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 1967ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் திலீப்குமார்.

இவர் 1992ஆம் ஆண்டு, மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படம் மூலம் இசைத்துறையில் அறிமுகமானார். இவருக்கு முதல் படமே தேசிய விருதை பெற்றுத் தந்தது.

இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படம் இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான ஆஸ்கார் விருதை 2009ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது.

இவர் பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண், இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தமிழக திரைப்பட விருது, மலேசிய விருது, கோல்டன் குளோப் விருது, கிராமிய விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

கபில் தேவ் 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 1959ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சண்டீகரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் கபில் தேவ் ராம்லால் நிகஞ்ச்.

இவருக்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகமாக காணப்பட்டது. பிறகு ஹரியானா அணியின் நிரந்தர ஆட்டக்காரரானார். தொடர்ந்து இரானி டிராஃபி, துலீப் டிராஃபி உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று ஆல்ரவுண்டராக முத்திரை பதித்தார்.

இவரது தலைமையிலான இந்திய அணி 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 1994ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

பின்பு ஆதரவற்றோர் மேம்பாட்டிற்காக குஷி என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது சாதனைகளை கௌரவித்து இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, அர்ஜுனா, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற இவருக்கு லெப்டினென்ட் கர்னல் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது.

கலீல் ஜிப்ரான்

ஓவியர், கவிஞர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட கலீல் ஜிப்ரான் 1883ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி லெபனான் நாட்டில் பஷ்ரி என்ற நகரில் பிறந்தார்.

இவர் படிக்கும் போதே கல்லூரி-கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கட்டுரை வடிவிலான கவிதைகள் அடங்கிய தி ப்ராஃபெட் வெளிவந்த சமயத்தில் ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்றார். இந்நூல் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

லெபனானில் ஜிப்ரான் அருங்காட்சியகத்தில் இவரது ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் இலக்கிய நட்சத்திரமாகக் திகழ்ந்த கலீல் ஜிப்ரான் 48-வது வயதில் (1931) மரணமடைந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks