truetamilnews.com

முக்கிய நிகழ்வுகள் :-

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு : அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில், 1968ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.

நினைவு நாள் :-

எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்

பிரபல வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 1931ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார்.

இவர் தனது எட்டு வயதில், முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பல முன்னணி பாடகர்கள் அனைவருக்கும் வயலின் வாசித்துள்ளார். தனி வயலின் கச்சேரிகளை 50 ஆண்டுகாலம் நடத்தி வந்தார்.

இவர் பாரூர் – எம்எஸ்ஜி ஸ்டைல் என்ற புதிய பாணியை அறிமுகம் செய்தார். பத்மபூஷண், பத்மஸ்ரீ, கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, கேரள சங்கீத நாடக அகாடமி விருது, டி.சவுடையா விருது, வயலின் வாத்திய சாம்ராட், வயலின் வாத்திய சக்ரவர்த்தி, சப்தகிரி சங்கீத வித்வமணி போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகளை நடத்தி இசைப் பிரியர்களால் ‘எம்எஸ்ஜி’ என பாசத்துடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 2013ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி 81வது வயதில் மறைந்தார்.

பிறந்த நாள் :-

வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ஆம் ஆண்டு ஜனவரி 03ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார்.

பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக, பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக்கும் ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூலிக்க முடியவில்லை.

1797ஆம் ஆண்டு கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் ஆங்கிலேயத் தளபதி ஆலன் வந்தார். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பின்பு நெல்லை கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு இவரை அழைத்தார்.

ஆனால் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வௌ;வேறு இடங்களுக்கு வரச் சொல்லிய ஜாக்ஸன், இறுதியாக ராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது, கட்டபொம்மனை கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு திரும்பினார்.

இந்த சந்திப்பின்போது வரி செலுத்துமாறு ஜாக்ஸன் இவரிடம் வலியுறுத்தினார். உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள் என்று கட்டபொம்மன் துணிச்சலாக அவரிடம் கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்த்தார்கள்.

இறுதியாக கயத்தாறு என்ற இடத்தில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும்கூட, என் தாய் மண்ணைக் காக்க உங்களுக்கு எதிராகப் போராடினேன் என கம்பீரத்துடன் முழங்கிய இவர் 1799ஆம் ஆண்டு கயத்தாறில் 39வது வயதில் அக்டோபர் 16ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

வேலு நாச்சியார்

தன் வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றிகொண்ட வீரப் பெண்மணி வேலு நாச்சியார் 1730ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி ராமநாதபுரம் அடுத்த சக்கந்தி என்ற ஊரில் பிறந்தார்.

இவர் கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரை 16வது வயதில் மணந்து, பட்டத்து ராணியானார்.

வடுகநாதர் ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்ட மறுத்ததால், நவாபின் படைகள் சிவகங்கை மீது போர் தொடுத்து மன்னர் வடுகநாதரை தாக்கிக் கொன்று, காளையார்கோட்டையை கைப்பற்றி விட்டார்கள்.

பிறகு ராணி சின்ன மருது, பெரிய மருது தளபதிகளின் துணையோடு தப்பிச் சென்று ஹைதர் அலியின் உதவியை நாடினார். சில ஆண்டுகாலம் கழித்து ஆங்கிலேயரை தாக்க உரிய நேரம் பார்த்து வேலு நாச்சியாரும் அவரது மகளிர் படையும் அரண்மனைக்குள் புகுந்து, திடீர் தாக்குதல் நடத்தி, கோட்டையைக் கைப்பற்றினர்.

சரித்திரப் புகழ்வாய்ந்த இந்த வெற்றி கிடைத்தபோது இந்த வீரமங்கைக்கு 50 வயது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர்தான். ஆங்கிலேயேரின் கொடி இறக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்டது. சிவகங்கை அரசியாகப் பதவியேற்றார்.

இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்ட வீராங்கனை வேலு நாச்சியார் தனது 66வது வயதில் மறைந்தார். 

சாவித்ரிபாய் புலே

சமூக சீர்திருத்தவாதியும், கவிஞருமான சாவித்ரிபாய் புலே 1831ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி மகாராஷ;டிரா மாநிலம் சதாரா மாவட்டத்திலுள்ள நைகான் என்ற சிற்றூரில் பிறந்தார். 

இவர் தன்னுடைய கணவருடன் இணைந்து பல சமூக நலப்பணிகளில் ஈடுபட்டார். 1846-ல் பெண்கல்விக்காக முதல் பள்ளியை பூனாவில் நிறுவினார். பெண் விடுதலை, சமூக அங்கீகாரம் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 1852-ல் மஹிளா சேவா மண்டலை தொடங்கினார்.

தீண்டாமை, குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடினார். கணவரின் மறைவுக்குப் பிறகும், சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்.

இவர் சிறந்த கவிஞரும்கூட. 1892-ல் கவிதை நூலை வெளியிட்டார். இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி, பெண் உரிமை, தீண்டாமை என அனைத்து களங்களிலும் கவிதைகள் எழுதி தனிமுத்திரை பதித்தார். இவர் தன்னுடைய 66வது வயதில் (1897) மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks