சென்னை: சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமையும் இணைந்த நாள் அமாசோமவாரம். இந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து 108 முறை வலம் வரவேண்டும். கார்த்திகை கடைசி சோமவாரம் அமாவாசை வருவது சிறப்பு. இந்த நாளில் மறக்காமல், அருகில் உள்ள அரசமரத்தை வலம் வந்து வேண்டுங்கள். வேண்டிய வரம் கிடைக்கும். அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்கிறது சாஸ்திரம். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருவது நல்ல அதிர்வுகளை உண்டாக்கும் என்று விவரிக்கின்றன ஞானநூல்கள். இதையே அஸ்வத்த பிரதட்சணம் என்கிறார்கள்.

அரச மரம், ஆன்மிகத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அரசமரம் பிரம்மா, சிவன், விஷ்ணு, ருத்ரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபமாக சிறப்பித்து சொல்வார்கள். மரங்களின் அரசனான அரசுக்கு பிப்பலம் என்னும் பெயரும் உண்டு. ஒவ்வொரு நாளும் அரச மரத்தைச் சுற்றி வலம் வருவதால் ஒவ்வொரு நன்மைகள் உண்டாகும்.

அரச மரத்தை ஞாயிற்றுக்கிழமையில் வலம் வந்தால் தீராத நோயும் தீரும். திங்கட்கிழமையன்று வலம் வந்தால் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் இந்நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் இன்னும் சிறப்பாகும். செவ்வாய்க் கிழமையில் வலம் வந்தால், செவ்வாய் தோஷங்கள் விலகும். புதன்கிழமையில் அரசமரத்தை வலம் வந்தால், வியாபாரம் பெருகும்.

வியாழக்கிழமையில் வலம் வந்தால், கல்வியில் சிறந்துவிளங்கலாம். வெள்ளிக்கிழமையில் அரசமரத்தை வலம் வந்தால், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம். சனிக்கிழமையில் வலம் வந்து வணங்கினால், சர்வ கஷ்டங்களும் விலகி மகாலட்சுமியின் பேரருளைப் பெறலாம்.

எத்தனை முறை அரசமரத்தை வலம் வருகிறோமோ, அதற்கும் தனித்தனியே பலன்கள் இருக்கின்றன. மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட ஸித்திகளும் அடையலாம். நினைத்ததை அடையலாம். ஐந்து முறை வலம் வந்தால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கப் பெறலாம். ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறலாம். வம்சம் விருத்தியாகும்.

பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அசுவமேத யாகம் நடத்திய பலன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறார்.

அமாவாசை நாளில் 108 சுற்றுக்கள் அரச மரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்தி மிகுந்திருக்கும். எனவேதான், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல ஆண்களும் வலம் வந்தால், அவர்களுக்கு சுக்கில விருத்தி அதிகமாகி குழந்தைப் பேறு கிடைக்கும்.

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திர பகவானுக்கு உரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம: என்ற ஸ்லோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.

நூற்றியெட்டு முறை பிராகார வலம் வந்து முடிந்ததும் பழங்களோ, வஸ்திரங்களோ தானமாக அளிக்கவேண்டும். இயன்ற அளவு அன்னதானம் செய்யலாம். அமாவாசையும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம் பெறுவோம். கார்த்திகை அமாவாசை மறக்காமல், அருகில் உள்ள அரசமரத்தை வலம் வந்து வேண்டுங்கள். வேண்டியதெல்லாம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks