தூத்துக்குடி: முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரிடம் ஊழல் புகார் அளித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் இ.பி.எஸ்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக கூறினார்.

மேலும், திமுக முன்னாள் அமைச்சர்கள் பலரது பெயரை சுட்டிக்காட்டிப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரம் வரும் போது எல்லாவற்றையும் வெளியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கோபம்

கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது வழக்கத்தை விட அவரது பேட்டியில் கோபம் சற்று அதிகம் இருந்தது. திமுக மீது கடுகடுத்த நிலையில் அரசு பெயருடனும் புகழுடனும் திகழ்வது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்றார்.

மலிவான அரசியல்

ஸ்டாலின் மலிவான அரசியல் விளம்பரத்தை தேடி வருவதாகவும் திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, தாமோ அன்பரசன், சுரேஷ்ராஜன், தமிழரசி, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உள்ளிட்ட பலர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறினார். மேலும், நேரம் வரும் போது திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளியிடுவேன் எனவும் தெரிவித்தார்.

முதல்வர் விமர்சனம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அதனால் தான் அதை விமர்சிப்பதாகவும் முதலமைச்சர் கூறினார். மேலும், ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ள அனைவரும் திமுக ஆட்சியிலும் டெண்டர் எடுத்து பணி செய்தவர்கள் தான் எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks