மாறி மாறி எம்.ஜி.ஆர் பெயரை சொந்தம் கொண்டாடும் தலைவர்களை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் கட்சி தொடங்கி தமிழக அரசியலில் ஆழம் பார்த்து வரும் கமலும், வரும் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள ரஜினியும் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து கொண்டிருக்கின்றனர். அரசியல் கட்சி என்ற அடையாளத்தை தாண்டி பட்டி, தொட்டி எங்கும் மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் எம்.ஜி.ஆர். இவரை அடையாளப்படுத்தி தான் அதிமுக அரசியல் செய்து வருகிறது. இந்நிலையில் ரஜினியும், கமலும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தை முன்னிறுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தன் நான் என்கிறார் கமல் ஹாசன்.

எம்.ஜி.ஆரின் ஆட்சியை நான் தருவேன் என்கிறார் ரஜினிகாந்த். இதற்கு ஆளும் அதிமுக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையில் எம்.ஜி.ஆர் போன்று யாராலும் வர முடியாது. ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருக்கிறது. அந்த வகையில் தமிழக மக்களின் மனங்களை வசீகரிக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி அரசியல் செய்யும் பாணியை ரஜினியும், கமலும் கையிலெடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் கொள்கை, மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகும் விஷயங்கள், பிரச்சார யுக்தி ஆகியவை தான் தமிழக மக்களை கவரும். எம்.ஜி.ஆர் என்ற பிம்பம் எந்த வகையிலும் பயனளிக்காது என்றும் விமர்சிக்கின்றனர். இந்த சூழலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான “நமது அம்மா” ரஜினி, கமலை விமர்சித்து பதிவிட்டுள்ளது. இதற்கு ’இரவல் பிழைப்பும்… இனிஷியல் திருட்டும்…’ என்று தலைப்பு இடப்பட்டிருக்கிறது.

அதில், புரட்சித்தலைவர் தன் ரத்தத்தில் விதையூன்றி உயிராக வளர்த்த இயக்கம் பொன்விழாவை நோக்கி வீறுநடை போடுகிறது. தொடங்கப்பட்டு 41 ஆண்டுகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆளும் இயக்கமாக உயர்ந்தோங்கி நிற்கிறது. இந்த சூழலில் மக்கள் திலகத்தை தங்கள் அரசியல் பிழைப்புக்கு சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள் புரட்சித்தலைவர் பெயரை பயன்படுத்தி அரசியல் அறுவடை செய்யலாம் என்று ஆசைப்படுபவர்கள் வேண்டுமானால் அதிமுகவில் வந்து அடிப்படை உறுப்பினராய் சேர்ந்து கொள்ளலாம்.

கலை உலகம் ஓய்வு கொடுத்த பிறகு எஞ்சிய காலத்தை அரசியலில் கழிக்க வரும் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவதாக தான் சொல்கிறார்கள். ஒருவர் கூட கருணாநிதி ஆட்சியை தருகிறேன் என்று சொல்வதில்லை என்றால் அதற்கான கூச்சம் ஏன் வந்தது? எப்படியோ அடுத்த கட்சித் தலைவரின் புகழை தங்களுடைய தாக்க நினைப்பதும், அண்டை வீட்டுக்காரரின் பெயரை அப்பாவுக்கு பதிலாக போட்டுக் கொள்வதும் அநேகமாக ஒன்று தானே என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks