சென்னை: 2020ம் ஆண்டில், அதிகமாக விவாதிக்கப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலை ‘டுவிட்டர் இந்தியா’ வெளியிட்டுள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்திய திரைப்படங்களில் அதிகமாக பேசப்பட்டது ஒரு தமிழ் திரைப்படம். அந்த திரைப்படம் இன்னும் ரிலீஸ் கூட ஆகாமலே இப்படி புயலை கிளப்பியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாக காத்திருக்கும், மாஸ்டர் என்ற திரைப்படம்தான் அதிகப்படியானோரால் விவாதிக்கப்பட்ட படமாக உள்ளது.

விஜய் செல்வாக்கு

இந்த வருடத்திலேயே அதிகம் ரீடிவிட் செய்யப்பட்ட போட்டோவாக டுவிட்டர் சமீபத்தில், விஜய் போட்டோவை அறிவித்தது. நெய்வேலியில் ஷூட்டிங் நேரத்தில் ரசிகர்கள் கூட்டத்தோடு,வேன் மீது ஏறி நின்று விஜய் எடுத்த ஒரு செல்பிதான் இந்த பெருமையை பெற்றிருந்தது. இப்போது அதே விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும் டுவிட்டரில் அதிகம் பேரால் பேசப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில், விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை இந்த டிரெண்ட் உள்ளங்கை நெல்லிக் கனி போல எடுத்துக் காட்டுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

2வது இடத்தில் தெலுங்கு படம்

டுவிட்டர் டிரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது, vakeel saab என்ற தெலுங்கு திரைப்படம். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் நடிப்பில் வெளியாக உள்ள படம் இது. வேணு ஸ்ரீரீம் இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

3வது இடம் பிடித்த வலிமை

டுவிட்டர் டாப் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ள திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் தயாராகி இன்னும் ரிலீஸ் ஆகாத இந்த திரைப்படம் 3வது இடத்தை பிடித்துள்ளது. சமூக வலைத்தளங்களில், யாருக்கு ரசிகர் அதிகம்? விஜய்க்கா, அஜித்துக்கா? என்ற மோதல்கள் அடிக்கடி நடக்கும். இந்த நிலையில்தான் டுவிட்டர் வெளியிட்டுள்ள இந்த பட்டியல், விஜய்க்கு சமூக வலைத்தளத்தில் உள்ள ‘வலிமையான’ இடத்தைக் காட்டுகிறது.

4வது இடம்

தெலுங்கின் மற்றொரு டாப் நடிகரான மகேஷ் பாபு நடிப்பில், வெளியாக உள்ள Sarkaru Vaari Paata அடுத்த இடத்தில் உள்ளது. பரசுராம் இயக்கத்தில், தமன் இசையமைப்பில் இப்படம் தயாராகியுள்ளது.

சூரரை போற்று

இந்த பட்டியலில், 5வது இடம் சூரரை போற்று படத்திற்கு கிடைத்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது இப்படம். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் ஒரு சேர பாராட்டுக்களை அள்ளி குவித்தது சூரரை போற்று திரைப்படம்.

தர்பார்

இப்பட்டியலில், RRR, Pushpa, Sarileru Neekevvaru, KGF Chapter2 ஆகிய படங்கள், முறையே 6 முதல், 9வது இடத்தை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் கடைசி இடம், அதாவது 10வது இடம், ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

ரஜினிகாந்த்துக்கு கடைசி இடம்

முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கடந்த ஜனவரி மாதம் ரிலீசான படம் தர்பார். தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் என்ற அந்தஸ்தில் ரஜினிகாந்த் இருப்பதாக ஒரு கருத்து உள்ள நிலையில், தர்பார் படத்தை டுவிட்டரில் குறைந்தபேர்தான் விவாதித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாக முன்பு போல அதிக லாபம் தரவில்லை என்ற குமுறல்கள் ஒரு பக்கம் உள்ள நிலையில், அதை ரஜினிகாந்த் தரப்பு மறுத்து வந்தது. ஆனால் டுவிட்டரில் கூட தர்பார் படத்திற்கு அதிக ஆர்வத்தை மக்கள் காட்டவில்லை என்பது தெளிவாகிறது. மாஸ்டர் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதும், தர்பார் படத்திற்கு குறைந்த எதிர்பார்ப்பு இருந்ததும், தமிழ் சினிமா மற்றும் மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்துள்ளது ரஜினியை காட்டிலும், விஜய்தானா என்ற கேள்விகளை எழுப்புகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks