truetamilnews.com

சென்னை:
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்துறையை முற்றிலும் சீர்குலைத்து கோடான கோடி மக்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என டெல்லி போராட்டக்களத்தில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய பாஜக அரசு தெரிவித்துவரும் நிலையில், டிசம்பர் 14 முதல் ரயில் மறியல் போராட்டம், சாலை மறியல் போராட்டம் என அறப்போராட்டத்தை முன்னெடுத்து செல்ல விவசாயிகள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தீர்மானித்து உள்ளது.

அதன்படி நாளை 14-ந்தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்துக்கும், தமிழகமெங்கும் நடைபெறும் போராட்டங்களுக்கும் ம.தி.மு.க. ஆதரவை வழங்குகிறது.

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வுரிமைக்காக டெல்லியில் விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதை மனதில் கொண்டு விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழகத்தில் அனைவரும் பேராதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

காத்திருப்பு போராட்டங்களில் மறுமலர்ச்சி திமுக விவசாய அணி தோழர்கள் அனைவரும் பங்கேற்று கடமையாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks