truetamilnews.com

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியே ஊட்டிக்கு பாரம்பரிய மிக்க மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இதில் பயணிக்க நாடு முழுவதும் இருந்தும், தமிழகம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இந்த ஊட்டி மலை ரயிலை தனியார் நிறுவனம் 13 நாள் (சனி, ஞாயிறு) இயக்க குத்தகைக்கு எடுத்துள்ளது. இதன்படி, கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமையில் அந்த தனியார் நிறுவனம் தனது ரயில் சேவையை தொடங்கியது. 9 மாதங்களாக கொரோனா ஊரடங்கால், மலை ரயில் இயக்கப்படாத நிலையில், தனியார் நிறுவனம் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முறை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் சென்று வர குத்தகை கட்டணமாக 4.95 லட்சத்தை ரயில்வே நிர்வாகத்திற்கு அந்த நிறுவனம் செலுத்தியுள்ளது.

இந்த ரயிலில், ஒவ்வொரு பெட்டிக்கும் விமான பணிப்பெண் போல், ஒரு பெண் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். பயணிகளுக்கு ஸ்நாக்ஸ், டீ, தண்ணீர் பாட்டில் கொடுக்கின்றனர். ஆனால், ஒரு நபருக்கான கட்டணம் 130 ரூபாயில் இருந்து 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மலை ரயிலில் பயணித்த ஒவ்வொரு நபரும் 3 ஆயிரம் கட்டணத்தை கொடுத்துள்ளனர். ஏழை, நடுத்தர மக்களின் ஊட்டி மலை ரயில் பயணம், இனி கனவாகவே மாறப்போகிறது என்ற கடும் எச்சரிக்கையை ரயில்வே தொழிற்சங்கங்களும், தன்னார்வ அமைப்புகளும் தெரிவித்துள்ளன. ஆனால், சேலம் ரயில்வே கோட்டம் தரப்பில், “ஊட்டி மலை ரயில் குத்தகை அடிப்படையில் சனி, ஞாயிறு இயங்க தனியாருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மலை ரயில் பெயரை எல்லாம் மாற்றவில்லை. வழக்கமான மலை ரயில் பயணம் தொடங்கும்போது முறையான அறிவிப்பு வெளியிடப்படும்,’’ எனத்தெரிவித்துள்ளது.

இதுபற்றி எஸ்ஆர்எம்யூ கோட்ட செயலாளர் கோவிந்தன் கூறுகையில், ‘‘மலை ரயிலை தனியாருக்கு குத்தகைக்கு விட்டதன் மூலம் டிக்கெட் கவுன்டரில் பணியாற்றும் ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் வேலையிழந்துள்ளனர். எனவே தனியாருக்கு குத்தகை அடிப்படையில் ரயில்களை இயக்க அனுமதிப்பதை உடனடியாக ரயில்வே நிர்வாகம் நிறுத்திக் கொள்ள வேண்டும்,’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks