சம்பள குறைப்பு தொடர்பான உத்தரவை உடனடியாக அமல்படுத்துவது தொடர்பாக சிறப்பு செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

Salary Cut for TN Employees

டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஊதிய கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்தனர். இதற்காக தனி நபர்கள் மற்றும் ஊழியர் சங்கங்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இவற்றை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தயார் செய்தனர். இது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் பலரின் சம்பளத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை பிறப்பித்தது. அதில், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட பலருக்கு அடிப்படை சம்பளம் குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.

இதன்மூலம் ஒவ்வொருவருக்கும் ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை மாத சம்பளத்தில் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேசமயம் கால்நடைத்துறை உள்ளிட்ட சில துறை ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு அரசு ஊழியர்களுக்கு வருத்தமளிக்கும் மற்றும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக தமிழக அரசின் அரசாணை அமைந்தது.

இந்த சூழலில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் செய்து கடந்த மாதமே கருவூலத்துறைக்கு பட்டியல் அளித்திருக்க வேண்டும். ஆனால் அதை உரிய நேரத்திற்குள் செய்யவில்லை. இதன் காரணமாக கடந்த நவம்பர் 30ஆம் தேதி பழைய ஊதியத்தின் அடிப்படையிலேயே அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் போடப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி, அனைத்துத் துறை உயர் அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அதில், ஊதிய மாற்றம் செய்யப்பட்ட 220 துறைகளைச் சேர்ந்த 52 பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களின் விவரங்களைச் சேகரித்திருக்க வேண்டும். கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் புதிய ஊதிய விகிதத்தில் தான் சம்பளம் நிர்ணயம் செய்து கருவூலத்துறைக்கு அனைத்துத் துறை உயர் அதிகாரிகளும் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

எனவே புதிய ஊதிய விகிதத்தில் டிசம்பர் மாத சம்பளத்தை வழங்கும் வகையில் உயர் அதிகாரிகள் பட்டியல் தயார் செய்ய வேண்டும். இதனை வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் கருவூலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks