truetamilnews.com

முக்கிய நிகழ்வுகள் :-

புகழ்பெற்ற திரைப்பட நடிகை சாவித்திரி 1935ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஆந்திரப் பிரதேசம் குண்டூரில் உள்ள சிறாவூரில் பிறந்தார்.

நினைவு நாள் :-

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கும் அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (தற்போது மத்தியபிரதேசம்) என்ற இடத்தில் பிறந்தார்.

இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் பலமுறை துயரங்களை அனுபவித்தார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவர் மீது பாசமாக இருந்ததால் பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர் என்ற பெயரை, பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.

உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். பிறகு 1923ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவினார்.

1930ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கிய பி.ஆர்.அம்பேத்கர் தனது 65வது வயதில் 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மறைந்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

பிறந்த நாள் :-

மாக்ஸ் முல்லர்

பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் 1823ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

இவர் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் கிரேக்கம், லத்தீன், அராபி, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளை கற்றார். இவர் பன்முகத்தன்மை கொண்டவர். கிழக்கத்தியப் புனித நூல்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. இது விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சியின் நினைவு சின்னமாகும்.

ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் வெளியிட வாழ்நாளில் பாதியை செலவிட்டார். அதன் கையெழுத்துப் பிரதியை தயாரிக்க 25 ஆண்டுகளும், அச்சிட மேலும் 20 ஆண்டுகளும் ஆயிற்று.

இந்திய தத்துவத்தின் ஆறு மரபுகள் இவரது புகழ்பெற்ற மற்றொரு நூலாகும். இந்தியர்கள் தங்களது பண்டைய இலக்கியத்தை கல்வியின் ஒரு அம்சமாக கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் தேசிய பெருமிதமும், சுயமரியாதையும் விழித்தெழும் என்று கூறியுள்ளார்.

இந்திய மக்களின் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டிருந்தார். ‘இந்தியா அழகு நிறைந்த பூலோக சொர்க்கம்’ என்று போற்றிய இவர் 76வது வயதில் (1900) மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks