Truetamilnews.com

மதுரையில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர், ஆட்டோ ஓட்டுநரிடம், ‘என்னிடம் 20 ரூபாய் தான் இருக்கிறது வரலாமா’ என்று கேட்ட சம்பவம் பேஸ்புக் பதிவு மூலம் வைரலாகியுள்ளது. 

மதுரை முனிச்சலையை சேர்ந்த பாண்டியன் என்பவர், ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். அவர், கடந்த 27-ம் தேதி காலையில் மதுரை அண்ணா சலை பேருந்து நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் நோக்கிச் சென்ற போது, அரசு மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிலையத்தில், முதியவர் ஒருவர் பேருந்தில் ஏற முற்பட்டுள்ளார். முதியவரின் ஒற்றைக்கால் செருப்பு அப்போது கீழே தவறி விழுந்துள்ளது. எனவே அவர் பேருந்திலிருந்து இறங்கிச் செருப்பைத் தேடியுள்ளார். 

அவரை அடையாளம் கண்ட பாண்டியன் முதியவரிடம் சென்று ஆட்டோவில் வரும் படி கேட்டுள்ளார். அதற்கு அந்த முதியவர், “என்னிடம் 20 ரூபாய் தான் இருக்கிறது. கொண்டுபோய் விட்டுவிடுவீர்களா?” என்று கேட்டிருக்கிறார். “சரிங்கய்யா” என்று சொல்லி அவரை ஆட்டோவில் ஏற கூறிய பாண்டியன், ஆட்டோவில் இருந்த அந்த முதியவருடன் ஒரு செல்ஃபி எடுத்து அதனை முகநூலில் பதிவிட்டார்.

“வெறும் 20 ரூபாயுடன், ஒற்றைக் கால் செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு மறு செருப்பைத் தேடித் திரிந்த அந்தப் பெரியவர் மதுரை கிழக்குத் தொகுதியில் இருமுறை எம்எல்ஏவாக இருந்த எளிமையின் சிகரமான நன்மாறன் அய்யா. கொள்கையில் முரண்பாடுகள் இருந்தாலும் மிகவும் எளிமையான, நேர்மையான, மனிதநேயம் கொண்ட மனிதரான அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று பாண்டிய பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து பாண்டியனிடம் திஇந்து தமிழ் கேட்டுள்ளது. அவர், “முதலில் வயதானவராக இருக்கிறாரே என்றுதான் உதவுவதற்கு முன்வந்தேன். அதன் பின் தான், அவர் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் என்று தெரியவந்தது. ‘எங்கே போகவேண்டும் அய்யா, ஆட்டோவில் ஏறிக்கோங்க’ என்றபோது, தயங்கியபடி ‘கருப்பாயூரணி போகவேண்டும். என்னிடம் 20 ரூபாய்தான் இருக்கிறது, கூட்டிட்டுப் போவீங்களா?’ என்று கேட்டார். எனக்குக் கண் கலங்கிவிட்டது. நான் பசும்பொன் தேசியக் கழகத்தின் மதுரை மாநகர் இளைஞரணிச் செயலாளராக இருக்கிறேன். ஆட்டோ ஓட்டிக்கொண்டே அரசியலிலும் இருப்பதால், மதுரையில் பொதுவாழ்வில் இருப்போரை நன்கு அறிந்தவன் நான்.

சைக்கிள் வாங்கவே காசில்லாமல் இருந்த பலர், இன்று டொயோட்டா, பார்ச்சூன் கார்களில் பறக்கிறார்கள். சமீபத்தில் மதுரையின் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்துக்குச் சீர்வரிசையாக மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களைக் கொடுத்தார். ஆனால், நன்மாறனோ கட்சி வாங்கிக்கொடுத்த ஸ்கூட்டருக்குப் பெட்ரோல் போட்டாலே கட்டுப்படியாகாது என்று, 72 வயதிலும் பேருந்தில் போய்க் கொண்டிருக்கிறார். எம்எல்ஏவாக இருந்ததற்கான பென்ஷன் தொகை ரூ.20 ஆயிரத்தில் பாதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தில் வாழ்கிறார். ஆட்டோவை விட்டு இறங்கும் வரையில் தான் முன்னாள் எம்எல்ஏ என்பதை அவராகச் சொல்லவே இல்லை” என்றார்.

நன்மாறனைத் தொடர்பு கொண்டு இந்தச் சம்பவம் உண்மையா என்று கேட்டபோது. “ஆமாம், உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றார். முகநூல் பதிவு விஷயத்தைச் சொன்னதும், “அதை எல்லாம் செய்தியாக்க வேண்டாம். டெல்லி விவசாயிகள் போராட்டம் போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks