இன்று முதல் அடுத்த கட்ட பொது முடக்கம் தளர்வுகளுடன் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் டிசம்பர் 7ஆம் தேதி முதல் கலை அறிவியல், தொழில்நுட்பம், கால்நடை, பொறியியல், வேளாண்மை, மீன் வளம் உள்ளிட்ட அனைத்து இளங்கலை இறுதி வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு எப்போது?

கல்லூரி திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. நவம்பர் 16ஆம் தேதி தமிழக அரசு பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டபோதும் பெற்றோர்கள், கல்வியாளர்கள், எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தம்!

ஆனால் பள்ளிகளைத் திறக்க வலியுறுத்தி தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலர் நந்தகுமார் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

கூலி வேலைக்கு செல்லும் ஆசிரியர்கள்!

அந்த மனுவில், “கொரோனா தொற்று பரவியதால், 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை; மாணவர்களுக்கு பாடங்கள் சரியாக நடத்தப்படவில்லை. உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், நர்சரி, பிரைமரி பள்ளிகளில், பலர் கல்வி கட்டணம் செலுத்தவில்லை. மெட்ரிக் பள்ளிகளில், 80 சதவீதம் பேர் கட்டணம் செலுத்தவில்லை. இதனால், ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆசிரியர்கள் பலர் கிராமங்களில் தினக்கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது.

கல்வி கட்டமைப்பு சீரழியுமா?

ஏழை, கிராமப்புற மாணவர்கள் இணையதள வசதி இல்லாமல், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கவில்லை. பல மாணவர்கள் படிப்பை மறக்கும் சூழல் உள்ளது. கல்வி கட்டமைப்பு சீரழிந்து விட்டால், நாடும் சீரழிந்து விடும். அதுபோன்ற தவறுகள், தங்கள் ஆட்சியில் நடந்து விடக்கூடாது. பல மாநிலங்களில், பல நாடுகளில், பள்ளிகள் திறந்து கற்றல், கற்பித்தல் பணிகள் சிறப்பாக நடக்கின்றன. எனவே, அரசின் அனைத்து விதிகளையும் பின்பற்றி, முக கவசம் அணிந்தவாறு, பள்ளிகளை திறந்து வகுப்புகள் நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புத்தகங்களை அரசே வழங்க வேண்டும்!

தனியார் பள்ளிகளில், 50 சதவீத மாணவர்கள், புத்தகம் வாங்காமல் உள்ளனர். அவர்களுக்கு, அரசின் சார்பில் இலவச புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இரண்டாவது கொரோனா அலை இல்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்து உள்ளார். எனவே, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று, பள்ளிகளை திறக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதரவும் எதிர்ப்பும்!

கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்துக்கும் கீழே குறைந்து விட்டதால் பாதுகாப்பு வழிமுறைகளை சரிவர கடைபிடித்து பள்ளிகளைத் திறக்கலாம் என ஒரு சாரார் கூறிவருகின்றனர். புயல், பருவமழை என வானிலை மாறியுள்ள நிலையில் பிற தொற்றுகளும் பரவ வாய்ப்புள்ளது. வழக்கமாக டிசம்பர் இறுதியில் அரையாண்டு விடுமுறையும் அறிவிக்கப்படும். எனவே தை பொங்கலுக்குப் பின் பள்ளிகளைத் திறக்கலாம் எனவும் மற்றொரு சாரார் கூறிவருகின்றனர். அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

பள்ளிகள் திறக்கும் தேதி?

எனவே இந்த மாத இறுதியில் அடுத்த மாதத்துக்கான ஊரடங்கு தளர்வு, பாதுகாப்பு வழிமுறைகளை அரசு வெளியிடும் போது பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks