truetamilnews.com

தமிழக அரசியலையும், திரைத்துறையையும் பிரித்துப் பார்க்க முடியாதவண்ணம் இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கிடக்கின்றன. அண்ணா, கலைஞர், எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர் என ‘பிளாக் அண்ட் வொயிட்’ காலத்திலேயே தமிழக அரசியலில் சினிமாக்காரர்கள் குழுமியிருந்தனர். திராவிட இயக்கத்தின் கொள்கையைத் திரைவழியே எடுத்துச் சொன்ன பலர், அரசியலிலும் கோலோச்சினார்கள். திராவிட இயக்க அரசியல் செயல்பாடுகளும், களச் செயல்பாடுகளும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கவும், பின்னாள்களில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக உருவெடுக்கவும் உதவின. கலைஞருடன் ஏற்பட்ட முரண்பாடால் `அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி ஆட்சியையும் பிடித்தார் எம்.ஜி.ஆர்.

அண்ணா, எம்.ஜி.ஆர் மட்டுமன்றி சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார்,கருணாஸ் வரை பலருமே தனிக்கட்சித் தொடங்கினார்கள். ஆனால், அந்தக் கட்சிகள் எவையுமே தி.மு.க., அ.தி.மு.க அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை. சில கட்சிகள் இன்றுவரை தேர்தல் அரசியலில் போட்டியிடுகின்றன. சில நடிகர்களால் தொடங்கப்பட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் நீடிக்க முடியாமல் கலைக்கப்பட்டன. அப்படி, திரைத்துறையில் பிரபலமடைந்து, தனிக்கட்சி தொடங்கி, சூடுபட்டு கட்சியைக் கலைத்தவர்கள் பட்டியலைப் பார்ப்போம்.

தனது முதல் படமான `பராசக்தி’யிலேயே தமிழக மக்களைச் சென்றடைந்தவர் சிவாஜி கணேசன். தொடர்ந்து தனது நடிப்பால் பல ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தார். அவர் 1955 வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபிமானி. அதன் பிறகு 1961-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் பதவிவகித்தார். 1987-ல் காங்கிரஸ் கட்சியில் ஜெயலலிதாவுடனான கூட்டணி குறித்த கருத்து மோதலால் அதிலிருந்து வெளியேறி, 1989-ல் `தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற கட்சியைத் தொடங்கினார். காங்கிரஸ் கட்சி, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க (ஜெ) அணியுடன் 1989-ல் கூட்டணிவைத்தது.

சிவாஜியின் தமிழக முன்னேற்ற முனன்ணி ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அ.தி.மு.க (ஜா) அணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் தமிழக முன்னேற்ற முன்னணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட சிவாஜி கணேசனும் தோல்வியைத் தழுவினார். இதன் காரணமாக 1989-ல் தொடங்கப்பட்ட அவரது கட்சி, அதே ஆண்டு கலைக்கப்பட்டது. அதன் பிறகு ஜனதா தளம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் சிவாஜி கணேசன்.

திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் எனப் பல அவதாரங்களில் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் பாக்யராஜ். அவரது திரைப்படங்களில், அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளர் என்பதற்கான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. எம்.ஜி.ஆர், தனது திரையுலக வாரிசு என பாக்யராஜை புகழ்ந்திருக்கிறார். அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்ட பாக்யராஜ், பின்னாள்களில் `எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால், அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு பிறகு தி.மு.க-வில் இணைந்தார்.

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் டி.ராஜேந்தர். தி.மு.க-வில் கொள்கைபரப்புச் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். தேர்தலில் போட்டியிட்டு வென்று தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார். தமிழக சிறுசேமிப்புத் திட்ட ஆலோசனைக்குழு துணைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். 2004-ல் தி.மு.க-விலிருந்து விலகி, `அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். பிறகு கட்சியின் பெயரை `இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்’ எனப் பெயர் மாற்றமும் செய்தார். ஆனால், சமீபத்தில் நமது நிருபரிடம் பேசிய அவர் “இனி ஒருபோதும் அரசியல் பேசப்போவதில்லை’’ எனத் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் முத்துராமனின் மகனும், நடிகருமான கார்த்திக்கும் சினிமா புகழ் வெளிச்சத்திலிருந்தபோதே `அனைத்திந்திய பார்வார்டு பிளாக்’ கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று அரசியலில் நுழைந்தார். அதன் பிறகு நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கினார். பின்பு அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு `மனித உரிமை காக்கும் கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தீவிர அரசியிலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார். அவரது கட்சிச் செயல்பாடு எந்த அளவில் இருக்கிறது என்பது வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தெரியவரும்.

நடிகர்களோ, வேறு துறை சார்ந்தவர்களோ புதிய கட்சியைத் தொடங்குவது முக்கியமல்ல. ஆனால், கொள்கையும், களச் செயல்பாடும், மக்கள் பற்றிய புரிதலும்தான் பிரதானமாக இருக்க வேண்டுமே தவிர `புகழ்’ மட்டுமே போதாது என்பதே வரலாறு நமக்கு அழுத்தமாகச் சொல்லும் நிதர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks