truetamilnews.com

சென்னை: அனைவரும் எதிர்பார்த்த ஒரு விஷயம் கடைசி வரை நடக்கவில்லை.. ஆனால் மக்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் சீக்கிரமே நடக்கப் போகும் போல இருக்கு.. அதுதான் சகாயம் ஐஏஎஸ் அவர்களின் அரசியல் பிரவேசம்.

தேர்தல் காலம் வந்துவிட்டாலே, முதல்வர் வேட்பாளருக்கு தானாக அடிபடும் பெயர் சகாயம்!!! டெல்லியில் ஆண்டாண்டு காலமாக பாஜக, காங்கிரஸ் என 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சியை யாருக்கும் விடாமல் பங்கு போட்டு கொண்டிருந்தபோது, இரண்டையுமே துடைப்பத்தால் அடித்து விரட்டி முதல்வர் ஆனார் கெஜ்ரிவால்.. அதுபோலவே இங்கு சகாயத்தை நம் மக்கள் பார்க்கின்றனர்!

பரம்பரை அரசியல், வாரிசு அரசியல், நன்கொடை, இலவசம் என்ற பெயரில் கருப்பு பணம், பணம் தந்தால் மட்டுமே வேட்பாளர் பதவி, ஓட்டுக்கு பணம், இப்படி புளித்து.. சலித்து போன அரசியல் இல்லாத ஒரு மாற்றத்தை சகாயம் உருவாக்குவாரா? நிச்சயம் உருவாக்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

உண்மையில் சகாயம் ஐஏஎஸ் அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழகத்தில் ஆசைப்பட்டவர்கள், படுபவர்கள் எக்கச்சக்கம் உள்ளனர். உங்களைப் போன்ற ஒருவர்தான் அரசியலுக்கும், தலைமைப் பதவிக்கும் தேவை என்று தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அவர் அமைதி காத்தே வந்தார். தனது அரசுப் பணியை செவ்வனே செய்து வருகிறார். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. கலெக்டராக பலருக்கு பலன் கொடுத்து வந்த அவரை கோ ஆப்டெக்ஸில் போட்டபோதும் கலங்கவில்லை.. அங்கும் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பின்னர் அறிவியல் நகரில் போய் கொண்டு உட்காரவைத்தபோதும் கூட அவர் அசரவில்லை.

ஆனால் இப்போது விஆர்எஸ் கேட்டுள்ளார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் மேலும் பலருக்கு இது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. சகாயம் முழுமையாக அரசியலுக்கு வரப் போகிறார் என்று பலரும் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நீண்ட காலமாக விரும்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இது பெரும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

இப்போது மக்களுக்கு அடுக்கடுக்காக பல கேள்விகள் எழுந்து வருகின்றன.. சகாயம் ஏன் திடீரென விஆர்எஸ் கேட்டுள்ளார்? விருப்ப ஓய்வுக்குப் பின்னர் செய்யப் போகிறார்? அவர் அரசியலுக்கு வருவாரா அல்லது வேறு திட்டம் வைத்துள்ளாரா ?.. அரசியலுக்கு வந்தால் பெரியார் போல சீர்திருத்த அரசியலில் இருப்பாரா அல்லது அண்ணா போல வாக்கு வங்கி அரசியலுக்கு வருவாரா? யாருடனாவது இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளாரா?

இப்படி பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன. கூடவே இரண்டு புதிய விஷயங்களையும் பலர் பேசியுள்ளனர். அதாவது ரஜினி அல்லது கமல்ஹாசனுடன் சகாயம் கை கோர்க்க வாய்ப்பிருக்கா என்று பலர் ஆலோசிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு லாஜிக்கும் உள்ளது. ரஜினி நேரடியாக அரசியலுக்கு வரவிரும்பவில்லை. அவருக்குப் பதில் அவருக்கு பிடித்தமான ஒருவரை, மக்கள் விரும்பும் ஒருவரை கை காட்டி ஆதரிக்க அவர் விரும்புவதாக சொல்கிறார்கள்.

அப்படி ரஜினி நினைக்கும் ஒருவராக ஏன் சகாயம் இருக்கக் கூடாது என்றும் சிலர் கேட்கின்றனர். ஆசைப்படுவதில் தவறில்லைதான்.. ஆனால் வலதுசாரி சிந்தனை கொண்ட ரஜினிக்கும், கிட்டத்தட்ட இடதுசாரி சிந்தனையுடன் கூடியவரான சகாயத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்றும் பலர் நம்புகிறார்கள். காரணம், சகாயம் வெளிப்படையானவர். எதையும் துணிச்சலாக செய்யக் கூடியவர், மாற்றத்தை உண்மையிலேயே கொண்டு வர வேண்டும் என்று விரும்புபவர்.. எல்லாவற்றையும் அப்பழுக்கற்றவர், ரொம்பவே வெளிப்படையானவர். எனவே ரஜினியுடன் சேருவது சாத்தியமில்லை என்று சொல்கிறார்கள்.

அப்படியானால் கமல்ஹாசனுடன் சேருவாரா என்ற கேள்வி வருகிறது. ஆனால் கிட்டத்தட்ட கமல்ஹாசனுக்கும், சகாயத்துக்கும் நிறைய ஏழாம் பொருத்தங்கள் உள்ளன. கமல்ஹாசன் இடது சாரி போல தெரிந்தாலும் அவரும் கூட பல விஷயங்களில் நீக்கு போக்குடன்தான் நடந்து கொள்கிறார். அது சகாயத்துக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை.

இப்படி பல கேள்விகளும் கூடவே விடைகளும் கிளம்பி வருகின்றன. ஆனால் சகாயம் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. சகாயம் மீது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை இருந்தாலும், சகாயம் என்றாலே சில அரசியல்வாதிகளும், சில அதிகாரிகளும் நடுங்கி விடுகிறார்கள். “நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமா.. சமூக நீதி தொடர்பாக சகாயத்துக்கு என்ன தெரியும்” என்றுகூட சிலர் கேட்டுள்ளனர்…

ஆனால் மக்கள் மனதில் ஒரே எண்ணம்தான் உள்ளது. சகாயம் முழு நேர அரசியலில் குதிக்க வேண்டும்.. அவரைப் போலவே நல்ல அதிகாரிகள் பலரும் இணைய வேண்டும்.. அவர் வேறு யாருடனும் இணைத்து பார்க்கவும், ஒப்பிட்டு பார்க்கவும் மக்கள் தயாராக இல்லை.. இது மீது சகாயத்தின் மீதான கவர்ச்சி கிடையாது… அரசியலில் ஒரு வித வெற்றிடம் கவ்விக் கொண்டுள்ளது.

ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கான கோர பசிதான் நம் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.. அந்த பசியை போக்க சகாயம் வருவார் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு. தமிழகத்திலும் திமுக, அதிமுக கட்சிகளை விரட்ட.. ஊறிபோன ஒரே மாதிரியான அரசியலை மொத்தமாக புரட்டிப்போட ஒரு மாறுபட்ட கட்சி வராதா என்ற தமிழக மக்களின் அடிநாத ஏக்கம் தான் “சகாயம்”!!

பார்க்கலாம்.. சகாயம் என்ன செய்ய போகிறார் என்பதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks