truetamilnews.com

பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே, தமிழ் மொழிமீதும், தமிழ் இலக்கியங்களின் மீதும் தீவிர பற்றுடையவராம் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு. பள்ளியில் படிக்கும்போது, `ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இலக்கியங்கள் குறித்து ஐம்பது நிமிடங்கள் பேசியே ஆக வேண்டும்’ என்ற ஆசிரியரின் கண்டிப்பே இலக்கியங்களின் மீதான அவரின் காதலுக்கு வழிவகுத்ததாம். ஆன்மிகம் உட்பட எந்தத் தலைப்பு கொடுத்தாலும் உடனே அது குறித்துப் பேசும் ஆற்றல்கொண்டவருக்கு சட்டமன்ற உரைகளிலும் இலக்கியங்களைத் தொட்டுப் பேசும் பழக்கம் உண்டு..

நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த வேலுவுக்கு கலை, இலக்கியம் சார்ந்த விஷயங்கள்தாம் வாழ்வின்மீதான ஒரு பிடிப்பையும் தன்னம்பிக்கையையும் தந்தன என்கிறார். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, கடையெழு வள்ளல்களைப் பற்றிச் சொந்தமாக ஸ்கிரிப்ட் எழுதி வாரா வாரம் நண்பர்களைவைத்து நாடகங்களை அரங்கேற்றியதோடு, சொந்தமாக நாட்டுப்புறப் பாடல்களையும் எழுதி நாடகங்களில் பயன்படுத்தியிருக்கிறாராம்..

இவரது ஆர்வங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம், தெருக்கூத்தின்மீது இவருக்கு இருக்கும் மரியாதையும் தேடலும். ‘கூத்துக்கலை எப்படி உருவானது, எப்படி வளர்ந்தது, அதில் எத்தனை வகைகள் உள்ளன, அதன் அரங்கேற்று நுட்பங்கள் எப்படிப்பட்டவை என ஆழமாகவும் தெளிவாகவும் உரையாற்றும் விஷய ஞானம் கொண்டவர் என்கிறார்கள். தான் செல்லும் இடங்களிலெல்லாம் கூத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் வேலு, ‘கூத்துக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை கொடுக்க வேண்டும். பேருந்துகளில் அவர்களுக்கு பாஸ் கொடுக்க வேண்டும். கூத்துக்குரிய ஒப்பனைப் பொருள்கள், ஆர்மோனியம் உள்ளிட்ட இசைக்கருவிகள் போன்றவற்றைப் பேருந்துகளில் ஏற்ற அனுமதிக்க வேண்டும்’ என கூத்துக் கலைஞர்களுக்கு ஆதரவாகக் கடந்த வருடம் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசினார். “என் வாழ்நாளில் 500-க்கும் மேற்பட்ட முறை கூத்துப் பார்த்திருப்பேன்” என்று சொல்லும் வேலு, இப்போதும் காரில் பயணிக்கும்போது, கிராமங்களில் தெருக்கூத்து நடந்துகொண்டிருந்தால், வண்டியை நிறுத்தி மெய்ம்மறந்து ரசிப்பாராம். கூத்தின் இடையிடையே வந்து கலகம் செய்து கலகலப்பூட்டும் கட்டியங்காரன்தான் இவருக்குப் பிடித்த பாத்திரமாம்!
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks