truetamilnews.com

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சந்தீப் காண்டேல்வால் ஒரு முதலீட்டு வங்கியாளராக தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் தனது மூதாதையர் நிலத்தில் விவசாயத்தை மேற்கொள்ள முடிவு செய்தபோது, இந்த முடிவு அவரது குடும்பத்தினரை கலக்கத்தில் தள்ளியது.

ஆனால் புனேவைச் சேர்ந்த எம்.என்.சி கிரெடிட் சூயஸ் முதலீட்டு வங்கி நிறுவனத்தில் ஆண்டுக்கு 16 லட்ச ரூபாய் சம்பளம் பெற்று வந்த சந்தீப், தனது வேலையை உதறிவிட்டு விவசாயம் செய்வதில் உறுதியாக இருந்தார்.

ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர், புனேவில் உள்ள சிம்பியோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பட்டம் பெற்ற 36 வயதான சந்தீப், சம்பல்பூர் மாவட்டத்தின் பாம்ரா தொகுதியில் உள்ள தனது கிராமமான குர்லாவுக்கு திரும்பினார்.

அவரது குடும்பம் 25 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக பூர்வீக நிலத்தை வைத்திருந்ததால் விவசாயம் அவரது மனதில் இருந்தது.

ஒரு வருடம், சந்தீப் கிராம பண்ணைகளைச் சுற்றிப் பார்த்து அடிப்படையான விஷயங்களை முதலில் அறிந்து கொண்டார். ஒரு வருடம் கழித்து, தலா ஒரு ஏக்கர் நிலத்தில் மிளகாய் மற்றும் இஞ்சி பயிரிட்டு விவசாயம் செய்யத் தொடங்கினார். ஆரம்பம் நன்றாக இருந்தது. அது அவருக்கு கொஞ்சம் லாபம் ஈட்டி கொடுத்ததால், அதிக பயிர்களைப் பரிசோதிப்பதற்கான அவரது தீர்மானம் மேலும் உறுதியானது.

அவர் ஆன்லைனில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார் மற்றும் விவசாய நுட்பங்கள் மற்றும் நீர்ப்பாசனம் குறித்த அறிவைப் பெற தனது கிராமத்தில் உள்ள விவசாயிகளுடன் உரையாடினார். பின்னர், காய்கறி சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொண்டார். இது அவரது பண்ணையில் உற்பத்தியை மேம்படுத்துவதில் பெரிதும் உதவியது.

தற்போது, ​​அவர் 11 ஏக்கர் நிலப்பரப்பில் பிரஞ்சு பீன்ஸ், காலிஃபிளவர், மிளகாய், வெண்டைக்காய், வெள்ளரி மற்றும் இனிப்பு சோளம் மற்றும் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளூர் வகை தர்பூசணி பயிரிடுகிறார். சந்தீப் மலர் வளர்ப்பு மற்றும் பிஸ்கல்ச்சர் ஆகியவற்றிலும் ஆர்வமாக உள்ளார்.

மேலும் அவர் சாமந்தி பூக்களையும் பயிரிடுகிறார். அவை உள்ளூர் சந்தைகளில் பண்டிகை காலங்களில் அதிகம் தேவைப்படுகின்றன. இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சாமந்திப் பூ செடிகள் ஆண்டுதோறும் 300 குவிண்டால் பூக்களை உற்பத்தி செய்கின்றன. 2018’ஆம் ஆண்டில், ரோஹு மற்றும் கேட்லா மீன்களின் வணிக உற்பத்திக்காக சுமார் 2 ஏக்கர் நிலத்தில் ஒரு குளத்தை அமைத்தார்.

“மீன் உற்பத்தி 2019’ல் ஆறு குவிண்டால் மட்டுமே இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இது 35 குவிண்டலாக உயர்ந்துள்ளது” என்று விவசாயி சந்தீப் கூறினார். 2.5 ஏக்கருக்கு மேல் 700 மா செடிகளை மூன்று கட்டங்களாக நடவு செய்துள்ளார் மற்றும் அவற்றின் வணிக உற்பத்திக்காக காத்திருக்கிறார்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்ப்பதன் மூலம், சந்தீப் இப்போது ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார். அதில் செலவுகள் போக 7 லட்ச ரூபாய் நிகர லாபம் கிடைப்பதாக சந்தீப் மேலும் கூறினார்.

மேலும் தனது பண்ணையில் தொழிலாளர்களாக உள்ள 16 பெண்கள் உட்பட 22 பேருக்கு தற்போது வாழ்வாதார உதவியை வழங்கி வருவதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக சந்தீப் தெரிவித்துள்ளார்.

விவசாயத்தில் எந்த வருமானமும் இல்லை என ஒரு பக்கம் ஆழமான கருத்து நிலவி வந்தாலும், திட்டமிட்டு செயல்பட்டால் எதிலும் வெற்றியடையலாம் என்பதற்கு சந்தீப்பின் வாழ்க்கையே ஒரு உதாரணம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks