truetamilnews.com

மதுரை: இந்தியிலேயே போதிய தேர்ச்சி பெறாத வடமாநிலத்தவர்கள், தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெற்று, அதிக மதிப்பெண்ணுடன் பணியில் சேர்வது எப்படி என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் உரிய வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். அதே நேரம் தமிழகத்திலுள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வடமாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் எலக்ட்ரீசியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் பணியிடங்களுக்கு சுமார் 1,600க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டது கடந்தாண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதோடு தபால்துறை, மின்துறையிலும் பல வடமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 2011லிருந்து மத்திய அரசு துறைகளில் நடந்த பணி நியமனங்களில் 99 சதவீதம் பேர் வடமாநிலத்தவர்கள் என்றும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெறும் 0.5 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. தற்போது மும்மொழி கொள்கையை திணிக்கும் மத்திய அரசின் முடிவிற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணகுமார், நீலகிரி அருவங்காட்டில் வெடிமருந்து தொழிற்சாலையில் கெமிக்கல் பிராசசிங் ஒர்க்கர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இவர், 40 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், இவரை விட குறைந்த மதிப்பெண் பெற்ற 6 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்த வழக்கில், மனுதாரருக்கு 4 வாரத்தில் பணி வழங்க தனி நீதிபதி கடந்த டிசம்பரில் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், ”மத்திய அரசு பணி தொடர்பான எந்த பிரச்னைக்கும் அதற்கென உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் தான் முறையிட முடியும். ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது” என வாதிடப்பட்டது. வக்கீல் சரவணன் ஆஜராகி, ”ரிட் மனு மீதான விசாரணையின்போது பணி வழங்க ஒத்துக் கொண்டனர். அவர்களது பதில் மனுவில் நிர்வாக தீர்ப்பாயம் தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை” என்றார்.

அப்போது நீதிபதிகள், ”ஒரு மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகள், அம்மாநில மக்களுடன் எளிதாக தகவல் கொள்ளும் வகையில் அம்மாநில மொழியை அறிந்திருக்க வேண்டும். அதே நேரம் வட மாநிலத்தவர்கள் இந்தியிலேயே போதிய தேர்ச்சி பெறாத நிலையில் தமிழ் மொழி தேர்வுகளில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்று பணியில் எப்படி சேர்கின்றனர் எனத் தெரியவில்லை. ஆனால், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்கின்றனர். மத்திய அரசு பணிகளுக்கான தேர்வெழுதி எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரட்டும். தேர்வு நடைமுறையில் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் தேவை. தமிழக மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தவர்கள் பலர் பணியில் சேர்ந்துள்ளனர். 

உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். ஆயுத தொழிற்சாலை பணியிடத்திற்கு நடந்த எழுத்துத் தேர்வின் விடைத்தாள்கள், முடிவு வெளியான 3 நாட்களில் அழிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் கூறுகின்றனர். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்ட 178 பேரின் விடைத்தாள்கள் இருக்கிறதா, இல்லையா? அழிக்கப்பட்டிருந்தால் அதற்கான அவசியமும் தேவையும் என்ன? நியமனம் எதன் அடிப்படையில் நடந்தது என்பது குறித்து, ஊட்டி ஆயுத தொழிற்சாலையின் பொதுமேலாளர் பதிலளிக்கவேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தவர்கள் பலர் பணியில் சேர்ந்துள்ளனர். உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks