truetamilnews.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தெம்பூட்டும் விதமாக இரண்டு முக்கிய வீரர்கள் மீண்டும் ஆடும் லெவன் அணிக்கு திரும்ப இருப்பதாக சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் தெரிவித்துள்ளது சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் அரங்கேறி வரும் நிலையில், சென்னை அணிக்கு கொரோனா வடிவில் ஆரம்பத்திலேயே பிரச்னை எழுந்தது. அணியில் 2 வீரர்களும், 11 உதவி பணியாளர்கள் என 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் என இரண்டு முக்கிய வீரர்கள் சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தது சென்னை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகிய தோனியின் ஆட்டத்தை நேரில் காணும் வாய்ப்பை இழந்து தவிக்கும் சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக முதல் 3 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி மும்பையுடனான முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுடன் தோல்வியை தழுவியது.

ரெய்னா, ஹர்பஜன் இல்லாத நிலையில் அணி பலவீனமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கொந்தளித்த சென்னை ரசிகர்கள் மீண்டும் ரெய்னாவை அணிக்கு அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இருப்பினும் அதற்கு வாய்ப்பில்லை என கையை விரித்தார் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங். முதல் போட்டியில் 71 ரன்கள் எடுத்து சென்னையின் வெற்றிக்கு கைகொடுத்த அம்பதி ராயுடுவும் காயமடைந்தது ரசிகர்களை விரக்திக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனிடையே, சென்னை அணி ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமான செய்தியை ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் வெளியிட்டுள்ளார். முதல் போட்டியில் காயமடைந்த அம்பத்தி ராயுடுவும், இதுவரை அணியில் இணையாத மேற்கு இந்திய தீவு வீரர் டுவைன் பிராவோவும் நாளை ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் பேசிய ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங், முதல் 3 போட்டிகளும் அடுத்தடுத்து நடைபெற்றதுடன், வெவ்வேறு மைதானங்களில் நடைபெற்றது போன்ற காரணங்கள் போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

செப் 25ம் தேதி நடைபெற்ற போட்டிக்கு பிறகு நாளை தான் அடுத்த போட்டியில் சென்னை விளையாட இருக்கிறது. 

இடைப்பட்ட 6 நாட்கள் ஓய்வு, அணி வீரர்கள் வலுவாக திரும்பி வர வாய்ப்பை தந்துள்ளது. எனவே நாளை நடைபெறும் போட்டிக்காக, வீரர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டுள்ளனர். புதிதாக பிராவோ, அம்பதி ராயுடு என முக்கிய வீரர்கள் இணைவது அணிக்கு பலத்தை ஏற்படுத்தும் என்றார்.

பலவீனமாக காட்சி தரும் சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்பதே சென்னை அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks