truetamilnews

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஆனாலும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் அனைத்து பணிகளும் செயல்படாமல் முடங்கியது. அப்போது அரசு ஊழியர்களும் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் வரை பணிக்கு வரவில்லை. பின்னர் மே மாதம் 35 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட்டன. ஜூன் மாதம் 50 சதவீத ஊழியர்களுடன் சுழற்சி முறையில் அரசு ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். அப்போது, அரசு அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும் என்று தமிழக தலைமை செயலாளர் அரசாணை வெளியிட்டார்.

தற்போது கடந்த 1ம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு ஊழியர்கள் பணிக்கு வருகிறார்கள்.அதனால், சனிக்கிழமை அன்று வழக்கம்போல அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதுபற்றி அரசு ஊழியர்கள் சங்கம் சார்பிலும் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும், தமிழக அரசு இதுபற்றி எந்தவித உத்தரவும் நேற்று வரை பிறப்பிக்கவில்லை. அதனால் இன்று (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும், அரசு ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்து விட்டது.

இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘அரசு ஊழியர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக 2 மாதங்கள் வேலைக்கு வரவில்லை. இதனால் பல பணிகள் முடிவடையாமல் உள்ளன. இதை ஈடுகட்ட வேண்டும் என்றால், அனைத்து சனிக்கிழமையும் அரசு அலுவலகங்கள் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. அதே நேரம் மாதத்தின் 2வது சனிக்கிழமை மட்டும், அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளதால் விடுமுறை அறிவிக்கப்படும். மற்ற சனிக்கிழமை ஏற்கனவே அறிவித்தபடி வேலைநாட்களாக இருக்கும். இதே நிலை வருகிற டிசம்பர் மாதம் வரை தொடரும்’ என்றார்.

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘எங்கள் கோரிக்கையை முதல்வர் பரிசீலிக்க வேண்டும். தற்போதும் சனிக்கிழமை விடுமுறை யாக அறிவிக்க வேண்டும் என்ற கோப்பு பொதுத்துறை அதிகாரிகள் பார்வையில் உள்ளது. விரைவில் நல்ல பதில் கிடைக்கும்’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks